சென்னையில் விநாயகர் சிலைகள் விற்பனை அமோகம் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் விநாயகர் சிலைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அந்த சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.;

Update: 2018-08-24 22:30 GMT
திரு.வி.க. நகர்,

நாடு முழுவதும் அடுத்த மாதம் 13–ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பல்வேறு இந்து அமைப்பினரும், குடியிருப்பு சங்கத்தினரும் தங்கள் பகுதியில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம்.

இதனை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஓட்டேரி குயப்பேட்டையில் உள்ள வெங்கடேசன் பக்தன் தெரு, சச்சதானந்தம் தெரு, மூக்கு தெரு, அருணாசலம் தெரு, புது மாணிக்கம் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் சாலை ஓரமாக விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சித்திபுத்தி விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சிவன் பார்வதியுடன் உள்ள விநாயகர் என பல்வேறு விதங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளன. அந்த சிலைகள் 1000 முதல் 8000 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் பலரும் விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மழை மற்றும் தூசிகளால் பாதிக்காமல் இருக்க அந்த சிலைகளை பிளாஸ்டிக் கவர்களால் மூடி வைத்துள்ளனர்.

 கடந்த 30 வருடங்களாக அந்த பகுதியில் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வரும் அதே பகுதியை சேர்ந்த சத்திய நாராயணன் (49) கூறியதாவது:–

ஓட்டேரி குயப்பேட்டையில் உள்ள சுமார் 100 குடும்பங்களை சேர்ந்த குயவர்கள் பரம்பரையாக விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் செய்து வந்தோம். மற்ற நாட்களில் மண்பானைகள் செய்து வருகிறோம்.

தற்போது வேதிப்பொருட்களை பயன்படுத்தி சிலைகள் செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால் நாங்கள் பலர் வேலை இழந்துள்ளோம். சென்னையில் களிமண் கிடைப்பது அரிதாக உள்ளதால் 4 அல்லது 5 குடும்பத்தினர் மட்டுமே இத்தொழிலை செய்து வருகிறோம்.

தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள மங்களம் எனும் ஊரில் இருந்து காகித கூழால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை இறக்குமதி செய்கிறோம். முன்கூட்டியே அங்கு சென்று சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்து விடுவோம். பின்னர் விநாயகர் சதுர்த்திக்கு முன்பு அங்கிருந்து லாரிகள் மூலம் சிலைகளை கொண்டு வந்து விற்பனைக்காக வைப்போம்.

சில விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து விடும். அவற்றை நாங்களே கரைத்து விடுகிறோம். ஒரு சிலை உடைந்தாலோ அல்லது விறபனையாகாமல் இருந்தாலோ எங்களுக்கு 3000 முதல் 5000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னையில் வேளச்சேரி, ரெட்டேரி, பாடி, செங்குன்றம் உள்ளிட்ட சில பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ‘ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ்’ வேதிப்பொருளை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தங்களின் தொழில் பாதிக்கப்படுவதாகவும், இதுபற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்