திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-08-24 21:15 GMT
திசையன்விளை, 

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சுடலை ஆண்டவர் கோவில் 

 நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவில் உள்ளது சுடலை ஆண்டவர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கொடை விழா வெகுவிமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான கொடைவிழா கடந்த 19–ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டி, சமய சொற்பொழிவு, அலங்கார பூஜை, அன்னதானம், நாடகம், இன்னிசை கச்சேரி, வில்லிசை, மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை, சமையல் போட்டி, கம்ப்யூட்டர் போட்டி, பரதநாட்டியம் உள்பட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானம், மதியம் மன்னர்ராஜா கோவிலில் இருந்து யானை முன் செல்ல, மேள, தாளம் முழங்க மஞ்சள் பெட்டி ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 தொடர்ந்து சுவாமி மஞ்சள் நீராடுதல், சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றது. இரவு சமய சொற்பொழிவு, இசை பட்டிமன்றம், கணியான் கூத்து, வில்லிசை, சுவாமி முட்டை விளையாடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்