சங்கரன்கோவிலில் தெருக்களில் குப்பை கொட்டினால் அபராதம் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
சங்கரன்கோவிலில் தெருக்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
சுங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் தெருக்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
சங்கரன்கோவில் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி தூய்மையான நகரமாக மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உருவாகும் குப்பைகளை மக்கும் தன்மை உள்ளவை, அபாயகரமான வீட்டுக்கழிவுகள் என தனித்தனியே பிரித்து மக்கும் தன்மை உள்ள கழிவுகளை பச்சை நிறக்கூடையிலும், மக்காத தன்மை உள்ள குப்பைகளை நீல நிற கூடையிலும், அபாயகரமான வீட்டுக்கழிவுகளை கருப்பு நிறக்கூடையிலும் சேகரித்து வைத்திருந்து தினமும் வீடு தேடி வரும் நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் அல்லது கழிவுகள் சேகரிக்க வருபவர்களிடம் வழங்கப்பட வேண்டும். துப்புரவு பணியாளர் தினமும் குப்பை வாங்கிய பின்பு உருவாக்கப்படுகின்ற குப்பைகளினை எக்காரணம் கொண்டும் தெருக்களிலோ, பொதுஇடங்களிலோ எறியாமல் வீட்டிலேயே குப்பை தொட்டியில் வைத்திருந்து மறுநாள் துப்புரவுபணியாளர் வரும்போது வழங்கவேண்டும்.5000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டிடங்கள் மற்றும் தினமும் 100 கிலோவிற்கு குப்பைகளை உற்பத்திசெய்யும் கட்டிட உரிமையாளர்கள் (அரசு மருத்துவமனை, அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், கல்வி நிலையங்கள் மற்றும் இதர கட்டிடங்கள்) தங்களது சொந்த செலவிலேயே குப்பைகளை அப்புறப்படுத்தி உரமாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு தனியே பிரித்து சேகரிக்கப்படும் மட்கும் குப்பைகளை நகராட்சிப்பணியாளர்கள் கொண்டு இயற்கை முறையில் மட்க வைத்து உரமாக தயாரிக்கப்பட்டு 1 கிலோ ரூ.5 முதல் ரூ.10 வீதம் பொதுமக்களுக்கு விற்கப்படுகிறது. மட்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் உருவாகும் மக்கும் குப்பைகளை தங்களது வீட்டிலேயே குழிதோண்டி இயற்கைமுறையில் உரம் தயாரிக்கலாம். தினமும் துப்புரவு பணியாளர் குப்பை வாங்க வரவில்லையென்றாலோ அல்லது வேறுஏதேனும் சுகாதார குறைபாடு அல்லது உரம் தயாரிப்பது சம்பந்தமாக ஏதேனும் விபரம் தேவைப்படின் நகராட்சி பொதுசுகாதார பிரிவில் நேரில் அல்லது நகராட்சி அலுவலக தொலைபேசி எண்.04636–222236 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.
இந்நகராட்சிப்பகுதியில் 31.12.2018 வரை 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரிபைகளை எந்த ஒரு நபரும் தயாரிக்கவோ அல்லது இருப்பு வைக்கவோ அல்லது விநியோகிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. 01.01.2019க்கு பின்பு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை தவிர மற்ற அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் தடை செய்யபடும். பொதுமக்களும் தாங்கள் கடைகளுக்கு வரும்போது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பைகள் மற்றும் பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.
இந்நகராட்சிப்பகுதியில் அனைத்து வார்டுகளிலும் பொது இடங்களிலும் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் மற்றும் திறந்தவெளி இடங்களில் கழிப்பிடங்களாக பயன்படுத்துவது மற்றும் மனித கழிவுகளை மனிதனே தனது கையால் அகற்றும் பணி தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்களது கட்டிடங்களில் கழிப்பறைகள் கட்ட இடம் இருந்தும் கழிப்பறைகள் கட்டாமல் இருப்பது குற்றமாகும்.
தங்களது வீட்டில் சுத்தமான தண்ணீரை சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை காற்றுபுகா வண்ணம் நன்கு இறுக மூடிவைத்திருக்க வேண்டும். மேலும் தங்களது வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தேவையற்ற கழிவுபொருட்களை கொசுபுழுக்கள் மற்றும் கொசுக்கள் உருவாகும் வண்ணம் காலியாகவோ, தண்ணீரோடோ வைத்திருக்க கூடாது. தங்களது கட்டிட சுற்றுப்புறங்கள் மற்றும் காலிமனைகளை சுகாதாரமாகவும், புதரின்றி பராமரிக்க வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்ட நடைமுறைகளை மீறும் நிகழ்வு ஒவ்வொன்றுக்கும் இந்நகராட்சி துணைவிதிகளில் உள்ள அபராத அட்டவணைப்படி அபராதத்தொகையுடன் தண்டிக்கப்படுவர். கழிவு உருவாக்குபவர் இந்த துணைவிதிகள் ஏதாவது ஒன்றை தொடர்ந்து மீறுவதாக கண்டறியப்பட்டால் அடுத்த முறை தண்டத்தொகை இரட்டிப்பாகும். அதற்குமேல் தொடர்குற்றங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு கூடுதலாக தினசரி ரூ.100ஃ– முதல் ரூ.10000ஃ– வரை கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். யாரேனும் அபராத தண்டத்தொகை கட்டவில்லை எனில் அவர்களுக்கு எதிராக காவல்துறை சட்ட மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி வழக்கு தொடரப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை இந்நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் பாலச்சந்தர். சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையாபாஸ்கர், இராமச்சந்திரன், சக்திவேல், மாதவராஜ்குமார், ஆகியோர் நடைமுறைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் இந்நகராட்சிப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மைப்பணிகளை மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கடைபிடித்து அபராத மற்றும் குற்றவியல் நடவடிக்கையை தவிர்த்து நமது நகரப்பகுதியை து£ய்மையான நகரமாக மாற்ற முழு ஒத்துழைப்பு வழங்கும்படி நகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.