தூத்துக்குடியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது.;

Update: 2018-08-24 21:30 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

மருத்துவ முகாம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் 350 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பங்கேற்றனர். அவர்களை டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்து உரிய சிகிச்சை மற்றும் உதவித்தொகை பெறுவதற்கு பரிந்துரை செய்தனர்.

நடவடிக்கை

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலம் மாற்றுத்தினுடைய குழந்தைகளுக்கான முகாம் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து உதவிகள் பெறுவதற்கும், சிகிச்சைகள் பெறுவதற்கும் பரிந்துரை செய்யப்படுகின்றனர். அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு மருத்துவ குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மாவட்ட உதவித்திட்ட அலுவலர் சக்திவேல், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சங்கரய்யா மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்