மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு சென்று திரும்பிய நெல்லை டிப்ளமோ என்ஜினீயர்

நெல்லையை சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயர் மோட்டார் சைக்களில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு விழிப்புணர்வு பயணமாக சென்று திரும்பி உள்ளார்.

Update: 2018-08-24 08:48 GMT
நெல்லை,

நெல்லையை சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயர் மோட்டார் சைக்களில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு விழிப்புணர்வு பயணமாக சென்று திரும்பி உள்ளார். அவர் வழிநெடுகிலும் விவசாயத்தை மேம்படுத்த வலியுறுத்தி பிரசாரம் செய்தார்.

டிப்ளமோ என்ஜினீயர்

நெல்லை தச்சநல்லூர் செல்வ விக்னேஷ் நகரை சேர்ந்த ஓவியர் ஜெயராமன்-ஆசிரியை சாந்தி தம்பதியின் மகன் அருணாச்சல பெருமாள் (வயது 22). டிப்ளமோ என்ஜினீயரான இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

விவசாயம் மற்றும் வனத்தை பாதுகாக்க வலியுறுத்தி அருணாச்சல பெருமாள் கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார். இவர் பல்வேறு மாநிலங்கள் வழியாக காஷ்மீர் மாநிலத்தில் தரைமட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 982 அடி உயரத்தில் உள்ள கார்துங்க்லா என்ற இடம் வரை சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி மீண்டும் கன்னியாகுமரியை வந்தடைந்தார்.

பின்னர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை நெல்லையில் உள்ள வீட்டுக்கு வந்தார். அங்கு அவரை குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் வரவேற்றனர்.

விழிப்புணர்வு பிரசாரம்

இது தொடர்பாக அருணாச்சல பெருமாள் கூறுகையில், “மோட்டார் சைக்கிளில் 28 நாட்களில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து விவசாயத்தை மேம்படுத்த வேண்டும், வனத்தை பாதுகாக்க வேண்டும், அடுத்த தலைமுறையினருக்கும் இயற்கை பயன் அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தேன். இந்த பயணம் எனக்கு பல்வேறு அனுபவங்களை தந்துள்ளது. மேலும் இதன் மூலம் தனியாக அதிக தூரம் பயணம் செய்த இந்திய இளைஞர் என்ற சாதனைக்காகவும் பதிவு செய்து இருக்கிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்