பண்டைக் காலத்தில் பயணங்கள் கால் நடையாக இருந்தபோது, இரவும் பகலும் பயணிக்க வேண்டி இருந்தது. அப்போது வழிப்போக்கர்கள் தடம் அறியவும் விலங்குகளின் தாக்குதல்களில் இருந்து தப்பவும் தீப்பந்தங்களை கொளுத்தி கையில் எடுத்துச் சென்றனர். பெரிய அரண்மனைகளில், சிறைகளில், பல்வேறு பொது இடங்களில் கட்டிடங்களின் உச்சியில் வழிகாட்டுவதற்காக தீவட்டிகளை கொளுத்தி எரியவிட்டிருப்பார்கள். இதற்காக சுவர்களில் பொந்துகள் (துளைகள்) மற்றும் விளக்கு மாடங்கள் அமைத்திருப்பார்கள்.
தீப்பந்தங்கள் கொஞ்சம் ஆபத்தானவையாக இருந்தது. கைகளை காயப்படுத்தும் வாய்ப்புகள் மிகுதியாக இருந்தது. இதைத் தவிர்க்க பாதுகாப்பான விளக்கு சாதனத்தை உருவாக்கும் முயற்சிகள் நடந்தது. மின்சார பேட்டரியில் ஒளிவீசும் விளக்கை ஒரே காலத்தில் கண்டுபிடித்து காப்புரிைம பெற்றவர்கள் லண்டனைச் சேர்ந்த எபனேசர் பர் மற்றும் தாமஸ் ஸ்காட். 1880களில் மேஜை விளக்கு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் கையில் எடுத்துச் செல்லும் பேட்டரி விளக்கை உருவாக்கி தனித்தனியே காப்புரிைம பெற்றிருந்தனர்.
பேட்டரியை தண்ணீர் புகாத ஒரு பெட்டியில் வைத்து, பொத்தான் முலம் இயக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. சுரங்கத் தொழிலாளர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள், பாதசாரிகள் என அனைவருக்கும் இந்த விளக்குகள் பயனுள்ளதாக இருந்தன. ஆனால் வெளிச்சம் சிறிதளவே இருந்தது.
விளக்கின் வெளிச்சத்தை அதிகப்படுத்துவதற்காக ரிப்ளெக்டர் எனப்படும் எதிரொளிப்பு சானங்களைப் பயன்படுத்திய டார்ச் விளக்குகள் 1896-ல் இங்கிலாந்தில் பின் அறிமுகமானது. இதே மாதிரியில் சைக்கிள்களில் பொருத்திக் கொள்ளும் விளக்குகளும் இதே காலத்தில் தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. ரிப்ளெக்டர் டார்ச் விளக்குகள் அதிக வெளிச்சத்தை தந்ததால் அதிக மவுசு பெற்றன.
முதன் முதலில் உருளைவடிவில் இப்போதிருக்கும் டார்ச் விளக்குகளை தயாரித்து விற்றவர் நியூயார்க்கை சேர்ந்த கார்னார்டு ஹுபர்ட் ஆவார். அவர் 1896-ல் இதை விற்பனைக்கு கொண்டு வந்தார். அதுவரை வந்திருந்த விளக்குகளைவிட இது கையாளுவதற்கு எளிதாக இருந்ததாலும், 3 பேட்டரிகள் இணைந்த விளக்காக இருந்ததாலும் அதிக ஒளி வீசுவதாகவும் இருந்ததால் மிகவும் புகழ்பெற்றது. இன்று வழக்கத்திலிருக்கும் விளக்குகள் இவர் வடிவமைப்பு மாதிரியில்தான் உள்ளன. ஆனால் இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. தலையில் பொருத்திக் கொள்ளும் விளக்குகள், சார்ஜ் ஏற்றி பயன்படுத்தும் விளக்குகள், விளையாட்டு சாதன விளக்குகள் என பல விதங்களில் டார்ச் விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன.
நீங்கள் டார்ச் விளக்குகளால் கையில் ஒளிவீசச் செய்யும்போது சிவப்பாக தோன்றுவதை பார்க்கலாம். அது உடலில் இருக்கும் ரத்த ஒட்டத்தின் எதிரொளிப்பாகும். டார்ச் விளக்கை கண்ணில் அடித்து விளையாடாதீர்கள். அது கண்ணை பாதிக்கும்!