விபத்தில் பலியான வாலிபரின் பிணத்துடன் உறவினர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் விபத்தில் பலியான பட்டதாரி வாலிபரின் பிணத்துடன் உறவினர் திடீர் சாலை மறியல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-08-24 00:26 GMT
பாகூர்,

புதுச்சேரி மாநிலம் கன்னியக்கோவில் கிராமத்தை அடுத்த வார்க்கால் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் பிரவீன்ராஜ் (வயது 22). பி.காம். பட்டதாரி. தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை பிரவீன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் கடலூரில் இருந்து கன்னியக்கோவில் கிராமத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பு ரோட்டில் வந்தபோது ரோடு ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ திடீரென வலதுபுறம் திரும்பியது. அப்போது ஆட்டோ மீது லேசாக மோதிய மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டில் சரிந்து சறுக்கியபடி ரோட்டின் எதிர்திசையில் சிறிது தூரம் சென்றது.

அப்போது ரோட்டின் எதிர்திசையில் கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து கோட்டக்குப்பம் நோக்கி வந்த இலியாஸ் (வயது 32)என்பவரின் மோட்டார் சைக்கிளும் பிரவீன்ராஜின் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரவீன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் பலியான பிரவீன்ராஜின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரவீன்ராஜ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொண்ட பிரவீன் ராஜின் உறவினர்கள் அதனை ஆம்புலன்சில் ஏற்றி வார்க்கால்ஓடை கிராமத்திற்கு புறப்பட்டனர்.

அவர்கள் திடீரென கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் பிணத்துடன் ஆம்புலன்சை நடுரோட்டில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதில் வார்க்கால் ஓடை கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விபத்துக்கு காரணமாக ஆட்டோவை பறிமுதல் செய்து டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன், கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விபத்து ஏற்பட காரணமான ஆட்டோவை பறிமுதல் செய்து டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து தொடர்பாக கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் (வயது32) மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவருடைய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்