சட்டவிரோத கோவில்களை இடிப்பதில் தாமதம் ஏன்? - மும்பை ஐகோர்ட்டு

சட்டவிரோத கோவில்களை இடிப்பதில் தாமதம் ஏன்? என அரசிடம் மும்பை ஐகோர்ட்டு விளக்கம் கேட்டு உள்ளது.;

Update: 2018-08-23 23:53 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று மாநிலத்தில் உள்ள சட்டவிரோத கோவில்களுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மராட்டியத்தில் 2009-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதிக்கு பின்னர் கட்டப்பட்ட சட்டவிரோத கோவில்களை இடிக்குமாறு உத்தரவிட்டது. இதை ஏற்றுக்கொண்ட மாநில அரசு 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் சட்டவிரோத கோவில்கள் இடிக்கப்படும் என ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தது.

ஆனால் குறித்த நேரத்திற்குள் அரசால் வேலையை முடிக்க முடியவில்லை. எனவே 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் கோரியது. ஐகோர்ட்டும் அனுமதி அளித்தது.

இதுதொடர்பான வழக்கு தற்போது நீதிபதி ஓகா மற்றும் சோனக் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில், சட்டவிரோத கோவில்களை இடிக்க மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், கால அவகாசம் வழங்க மறுத்துவிட்டனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், “ அனைத்து சட்டவிரோத கோவில் களையும் ஏன் குறித்த காலத்திற்குள் இடித்து முடிக்கவில்லை என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்கவேண்டும். இதுகுறித்து ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும்.

அரசு தரும் விளக்கத்தில் திருப்தி ஏற்படாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை 2 வாரங்களுக்கு பின் ஒத்தி வைத்தனர். 

மேலும் செய்திகள்