திருப்பத்தூரில் அ.ம.மு.க.வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகை
திருப்பத்தூரில் அ.ம.மு.க. வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு திருப்பத்தூர் செட்டித்தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ். திருமண மண்டபம் அருகில் அ.ம.மு.க. அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
இதேபோல் மிட்டூர் கிராமத்தில் நடைபெறும் திருமண விழாவில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளுக்காக ஏற்கனவே அனுமதி பெற்று திருப்பத்தூர் பகுதியில் பேனர்கள், கொடிகளை அ.ம.மு.க.வினர் வைத்தனர். அதனை அப்புறப்படுத்தக் கோரி நகராட்சி அதிகாரிகள் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அ.ம.மு.க.வினர் நகராட்சி அலுவலகம் சென்றனர். அங்கு ஆணையாளர் இல்லாததால் டவுன் போலீஸ் நிலையம் சென்று, போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள், நாங்கள் ஏற்கனவே அனுமதி பெற்றுவிட்டோம், நாளை (சனிக்கிழமை) அகற்றி விடுகிறோம் என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததன்பேரில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.