மாரடைப்பால் மரணம் அடைந்த காங்கிரஸ் தலைவர் குருதாஸ் காமத் உடல் தகனம்

மாரடைப்பால் மரணம் அடைந்த காங்கிரஸ் தலைவர் குருதாஸ் காமத்தின் உடல் நேற்று செம்பூரில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Update: 2018-08-23 23:48 GMT
மும்பை,

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குருதாஸ் காமத் மும்பையை சேர்ந்தவர். 63 வயதான இவர் டெல்லியில் வசித்து வந்தார். அங்குள்ள இல்லத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் காலை மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.

நேற்று காலை செம்பூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் தேசியக்கொடி போர்த்தி வைக்கப்பட்டு இருந்தது. குருதாஸ் காமத்தின் உடலுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மாநில மந்திரிகள் வினோத் தாவ்டே, பிரகாஷ் மேத்தா, மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவர் கணேஷ்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் பா.ஜனதா மும்பை தலைவர் ஆசிஷ் செலார், முன்னாள் மத்திய மந்திரி முகுல் வாஸ்னிக் உள்பட அரசியல் கட்சியினர் குருதாஸ் காமத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் குருதாஸ் காமத்தின் இறுதி ஊர்வலம் அவரது வீட்டில் இருந்து தொடங்கியது.

இதில் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர். செம்பூர் சுடுகாட்டில் குருதாஸ் காமத்தின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது சிதைக்கு அவரது மகன் சுனில் தீ மூட்டினார். 

மேலும் செய்திகள்