வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் புகைப்பட கண்காட்சி 29-ந் தேதி வரை நடக்கிறது

வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது. இக்கண்காட்சி வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.

Update: 2018-08-23 23:44 GMT
பூந்தமல்லி,

உலக புகைப்பட தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 19-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் சென்னை புகைப்பட சொசைட்டி சார்பில் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது.

இதில் புகைப்பட கலைஞர் வெங்கட்ராம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் (நிதி) சுஜாதா ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தனர்

பின்னர் அவர்கள் அரங்குகளில் வைக்கப்பட்டு இருந்த மெட்ரோ ரெயில், இயற்கை சார்ந்த புகைப்படம் மற்றும் சென்னையின் பிரசித்தி பெற்ற புகைப்படங்களை பார்வையிட்டனர். மேலும் சிறந்த புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர்களை பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து சென்னை புகைப்பட சொசைட்டி தலைவர் சுவாமிநாதன் கூறியதாவது:- ஆண்டுதோறும் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி நடைபெறும். இந்த முறை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. இதற்கு காரணம் மெட்ரோ ரெயில் என்றால் வசதியானவர்கள் செல்லக்கூடியது, அதிக செலவு ஆகும் என்று பொதுமக்கள் சிலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

அதனை போக்கும் விதமாக மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் தொடக்கம் முதல் இறுதி வரையில் நடந்த பணிகள் மற்றும் அதில் பயணிக்கும் பயணிகள், மெட்ரோ ரெயில் நிறுத்தும் இடம், அலுவலகம், மெட்ரோ ரெயில் செல்லும் வழித்தடத்தின் கழுகு பார்வை என மெட்ரோ ரெயில் தொடர்பான பல்வேறு படங்களை எடுத்து அதனை இங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 29-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இதையொட்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு 150-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கட்டிடக்கலை-தொழில் நுட்பம், இயற்கை நிலக்காட்சி, இரவில் சென்னை என 3 பிரிவுகளின் கீழ் புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன. கன்னியாகுமரியில் சூரிய உதயம், நீலகிரி மவுண்ட் ரெயில், விவேகானந்தர் மண்டபம், திருமலை நாயக்கர் மகால், காந்தி மண்டபம், யானை, புலிகள் போன்ற புகைப்படங்கள் கண்களை கவரும் வண்ணம் உள்ளன.

‘ஷூட் மெட்ராஸ்’ என்ற பிரிவில் எடுக்கப்பட்டு சிறந்த புகைப்படங்களாக தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் புகைப்பட துறையில் ஆர்வம் உள்ளவர்கள் வந்து பார்த்து செல்கின்றனர். மேலும் அவர்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களுடன் ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்