அரிசி ஆலை அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி திருப்பூரை சேர்ந்த நில தரகர் கைது

நிலம் வாங்கித்தருவதாக அரிசி ஆலை அதிபரிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் மோசடி செய்த திருப்பூரைச் சேர்ந்த நில தரகரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Update: 2018-08-23 23:26 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு ஒன்றியம் வங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கசமுத்திர கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர், சொந்தமாக அரிசி ஆலை வைத்து உள்ளார். இவர், தனக்கு திருப்பூரில் நிலம் வேண்டும் என தெரிந்தவர்களிடம் கூறி இருந்தார்.

இதை அறிந்ததும் திருப்பூர் மங்கலம் திருமலை கார்டன் பகுதியை சேர்ந்த நில தரகர்களான மூர்த்தி(வயது50) மற்றும் அவருடைய நண்பரான நடராஜன் ஆகியோர் சண்முகத்தை சந்தித்து, தாங்கள் திருப்பூரில் நிலம் வாங்கித்தருவதாக கூறினர். அதன்படி திருப்பூரில் உள்ள நிலத்தையும் சண்முகத்திடம் காண்பித்தனர்.

இதை நம்பிய சண்முகம், அந்த இடத்துக்கு ரூ.1 கோடியே 10 லட்சத்தை மூர்த்தி மற்றும் நடராஜனிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட 2 பேரும் அந்த நிலத்தை சண்முகத்துக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் அவரை ஏமாற்றி, தங்களது பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டனர்.

இதை அறியாத சண்முகம், கடந்த ஒரு வருடமாக தனக்கு நிலத்தை பத்திரப்பதிவு செய்து தருமாறு கேட்டு வந்தார். அவர்களும் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் சண்முகம் நிலத்தை வாங்கி தரவேண்டும். இல்லை தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். அதன்பிறகு இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

இந்த மோசடி குறித்து சண்முகம், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று திருப்பூரில் பதுங்கி இருந்த நில தரகரான மூர்த்தியை கைது செய்த போலீசார் அவரை திருவள்ளூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு தரகரான அவருடைய நண்பர் நடராஜன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்