கஞ்சா விற்பனை செய்த தம்பதி கைது
மடத்துக்குளம் அருகே கஞ்சா விற்பனை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மடத்துக்குளம்,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கஞ்சா கடத்துபவர்களையும், கஞ்சா விற்பனை செய்பவர்களையும் போலீசார் கண்டு பிடித்து அவர்களை கைது செய்து வருகிறார்கள். மேலும் யாராவது கஞ்சா விற்பனை செய்கிறார்களா? என்றும் கண்காணிக்கின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கஞ்சா கடத்தல் தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் நேற்று தனிப்பிரிவு போலீஸ்காரர் செந்தில், உடுமலை அருகே மடத்துக்குளம் நால்ரோடு பிரிவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கணியூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ்காரர் செந்தில் கண்காணித்தபோது, அவர்கள் 2 பேரும் சிறிய பொட்டலம் போன்றவற்றை விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து மடத்துக்குளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து, அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். மேலும் அவர்களிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாமரைகுளம் பகுதியை சேர்ந்த நல்லுச்சாமி (வயது 40) என்பதும், அந்த பெண் அவருடைய மனைவி மகாலட்சுமி (26) என்பதும் தெரியவந்தது. கணவன் -மனைவி இருவரும் கஞ்சாவை 5 கிராம் அளவில் பொட்டலமாக கட்டி அவற்றை ஒரு பொட்டலம் ரூ.100-க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லுச்சாமி மற்றும் மகாலட்சுமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து கணவன் -மனைவி இருவரும் கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தார்கள்? யார் யாருக்கு சப்ளை செய்கிறார்கள்? இவர்களுக்கும் வேறு கும்பலுக்கும் தொடர்பு ஏதும் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள நல்லுச்சாமி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மடத்துக்குளம் அருகே தம்பதியிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.