எனது கன்னத்தில் அறைந்ததால் வெட்டி கொன்றேன்: தொழிலாளி வாக்குமூலம்

வனப்பகுதியில் வெட்டு காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்த வழக்கில், தொழிலாளி கைது செய்யப்பட்டார். ‘எனது கன்னத்தில் அறைந்ததால் வாலிபரை வெட்டி கொன்றேன்‘ என்று போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-08-23 22:23 GMT
பந்தலூர், 


பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே சன்னக்கொல்லி சுள்ளிமூலா ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் மனு(வயது 27). கூலி தொழிலாளி. இவர் கடந்த 21-ந் தேதி சன்னக்கொல்லி வனப்பகுதியில் உடலில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து ஆதிவாசி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தேவாலா துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் பிணத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கையில், மனு வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மனு கொலை வழக்கில், அதே பகுதியை சேர்ந்த சந்திரன்(46) என்ற தொழிலாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

சம்பவத்தன்று நானும், மனுவும் சன்னக்கொல்லி வனப்பகுதியில் மரம் வெட்ட சென்றோம். அங்கு ஒரு மரத்தை மனு வெட்டினார். ஆனால் அது நான் வெட்டுவதற்காக பார்த்து வைத்திருந்தது. இதனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது திடீரென மனு எனது கன்னத்தில் அறைந்துவிட்டார். அதில் ஆத்திரம் அடைந்த நான், கையில் வைத்திருந்த அரிவாளால் மனுவை வெட்டி கொன்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் சந்திரனை கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்