அருப்புக்கோட்டை மக்களின் தாகம் தீர்க்க வருகிறது, வைகை தண்ணீர்

வைகை அணை தண்ணீர் அருப்புக்கோட்டைக்கு இன்று வந்து சேரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Update: 2018-08-23 22:13 GMT
அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடி நீர் திட்டம், வைகை குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வைகை வறண்டதால் தாமிரபரணி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அந்த தண்ணீர் போதுமானதாக இல்லாததால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடிநீர் வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டது. தற்போதுதான் நிலைமை சீரடைந்து ஓரளவுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இதற்கிடையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 20-ந் தேதி திறக்கப்பட்ட அந்த தண்ணீர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை வந்தடைந்துள்ளது. அங்கிருந்து அருப்புக்கோட்டை அருகிலுள்ள கட்டங்குடியில் இருந்து மோட்டார்மூலம் பம்ப் செய்யப்பட்டு குழாய் மூலம் நகரிலுள்ள குடிநீர் தொட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு வைகை தண்ணீர் அருப்புக்கோட்டைக்கு வந்தது. அப்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை அதைப்போல நிகழ்ந்து விடாமல் இருக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை (சனிக்கிழமை) வைகை தண்ணீர் அருப்புக்கோட்டைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாகம் தீர்க்க வரும் வைகை நீரை பெற மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
வைகை வறண்டு போனதால் தாமிரபரணியில் இருந்து கிடைக்க பெற்ற தண்ணீரை வைத்து 20 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வினியோகித்து வந்தோம். பருவ மழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக அங்கிருந்து கிடைக்க பெற்ற குடிநீரும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வந்து சேரவில்லை. இதனால் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது.

தற்போது வைகை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளவை அடைந்ததால் குடிநீர் வினியோகத்திற்காக சமீபத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தாமிரபரணியில் இருந்து ஒவ்வொரு நாளும் கிடைக்கப் பெரும் 35 லட்சம் லிட்டர் தண்ணீரும் அருப்புக்கோட்டை நகருக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் வைகை அணையிலிருந்து கிடைக்கப் பெறும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் நகருக்கு வந்து சேரும் போது வினியோகம் மேம்பட்டு வாரத்திற்கு ஒரு நாள் சுழற்சி முறையில் வழங்கப்படும். இதன் மூலம் நீண்ட நாட்களாக நிலவும் குடிநீர் தட்டுப்பாடு ஓரளவுக்கு நீங்கும் நிலை ஏற்படும். இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்