ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 161 பேர் மீது வழக்குப்பதிவு

அரியலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 161 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-08-23 22:30 GMT

அரியலூர்,

இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிந்து செல்லாத காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானபேர் இறந்துள்ளனர். இதில் தொடர்ந்து உயிர்பலி அதிகரித்து வருகிறது.

மோட்டார் வாகன சட்ட பிரிவு 129–ன்படி இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதனை சென்னை உயர்நீதிமன்றமும் பலமுறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் மீது சட்ட பிரிவு 129–ன் கீழ் 161 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் சட்டப்படி போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவல் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வெண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது பிரிவு 129 மோட்டார் வாகன சட்டப்படி போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்