கன்டெய்னர் லாரி காவிரி ஆற்றில் பாய்ந்தது; டிரைவர் பரிதாப சாவு
கோவையில் இருந்து சென்ற கன்டெய்னர் லாரி காவிரி ஆற்றில்பாய்ந்ததில், டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
குமாரபாளையம்,
கோவையில் இருந்து சென்னை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. லாரியை திருச்சி பீமா நகரை சேர்ந்த சிவக்குமார் (வயது 55) ஓட்டி வந்தார். அந்த லாரி சென்னையில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். அதில் தபால் லோடு ஏற்றப்பட்டு இருந்தது.
நேற்று அதிகாலை 3 மணி யளவில் பவானிக்கும், குமாரபாளையத்திற்கும் இடையே காவிரி ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் அந்த லாரி வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக பாலத்தில் ஓடியது. ஒரு கட்டத்தில் லாரி பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் கன்டெய்னர் லாரி முழுவதுமாக ஆற்றில் மூழ்கியது.
அதே நேரத்தில் அந்த லாரிக்கு பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாக குமாரபாளையம் மற்றும் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் 2 ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு அந்த லாரியை இரும்பு கம்பிகளை கட்டி ஆற்றில் இருந்து மீட்கும் பணி நடந்தது. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த லாரி பாலத்திற்கு மேலே கொண்டு வரப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரன், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் ஆகியோர் நேரில் வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். ஆற்றில் பாய்ந்து மூழ்கி மீட்கப்பட்ட லாரியில் டிரைவர் சிவக்குமார் முகத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து நடந்த பாலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் உள்ளது. ஆனால் இந்த பாலத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும், விளக்குகள் முற்றிலும் எரிவது இல்லை என்பதால் பாலம் எப்போதும் இருளில் மூழ்கி இருப்பதே இந்த விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.