தமிழக போக்குவரத்து துறை சார்பில் 2 லட்சம் அம்மா குடிநீர் பாட்டில்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது

தமிழக போக்குவரத்து துறை சார்பில் 2 லட்சம் அம்மா குடிநீர் பாட்டில்கள் கேரளாவுக்கு நிவாரணமாக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2018-08-23 23:00 GMT

கரூர்,

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பிவைக்கும் நிகழ்வு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் போர்வைகள், அரிசி, சேலைகள், சானிட்டரி நாப்கின்கள், விரிப்புகள், பாய், தலையணைகள், தண்ணீர் பாட்டில்கள், குழந்தைகளுக்கான உடைகள் உள்ளிட்ட 23 வகையான ரூ.9 லட்சத்து 2 ஆயிரத்து 815 மதிப்பிலான நிவாரணப்பொருட்களையும், கரூர் வர்த்தக சங்கம் சார்பாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களையும், டெக்ஸ்டைல் அசோசியேசன் சார்பாக ரூ.14 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களையும் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆகியோர் லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கரூர் மாவட்டத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.17 லட்சத்து 5 ஆயிரத்தில் 14 வகையான நிவாரணப் பொருட்கள் கடந்த 18–ந் தேதி அன்று அனுப்பி வைக்கப்பட்டது. 2–ம் கட்டமாக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சார்பில் ரூ.6 லட்சத்தில் 7 வகையான நிவாரணப்பொருட்களும், சீரடி ஸ்ரீ சாய் சேவாசமாஜம் சார்பாக ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களும் கடந்த 21–ந் தேதி அன்று அனுப்பி வைக்கப்பட்டது. 22–ந் தேதி அன்று அனைத்து லயன்ஸ் சங்கங்கள் மற்றும் லியோ சங்கங்கள், சன் ஆடவர் சுயஉதவிக்குழு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களும் என மொத்தம் ரூ.43 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று (நேற்று) மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை உள்ளிட்டவற்றின் சார்பில் ரூ.25 லட்சத்து 2 ஆயிரத்து 815 மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பியுள்ளோம். மேலும் முதல்–அமைச்சரின் நிவாரண நிதியாக பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் சார்பில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான காசோலையும் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுவரை மொத்தம் ரூ.69 லட்சத்து 88 ஆயிரத்து 820 மதிப்பிலான நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழக போக்குவரத்துத்துறையின் சார்பில் முதல்– அமைச்சரின் ஒப்புதலோடு விரைவில் கோவையிலிருந்து 2 லட்சம் ‘‘அம்மா குடிநீர்’’ பாட்டில்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, கரூர் டெக்ஸ்டைல்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் அட்லஸ் எம்.நாச்சிமுத்து, செயலாளர் பிருத்வி, ஏற்றுமதியாளர் குவாலிட்டி காமராஜ், வர்த்தக சங்கத்தலைவர் வக்கீல் ராஜு, அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில துணை செயலாளர் கே.எஸ்.வெங்கட்ராமன், கரூர் மாவட்ட அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் ஆர்.கந்தசாமி, பொருளாளர் செல்வம், அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்