ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்: 2-வது நாளில் 3 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்
சேலத்தில் நடைபெற்று வரும் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் 2-வது நாளில் 3 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்.
சேலம்,
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்த 34 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். முதல்நாளில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம், மார்பளவு, ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத இளைஞர்கள் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முடிவில் 600 பேர் மட்டுமே அடுத்த கட்ட மருத்துவ பரிசோதனை மற்றும் எழுத்து தேர்வுக்கு தேர்ச்சி பெற்றதாகவும், அது சம்பந்தமான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், 2-வது நாளான நேற்று சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் இளைஞர்கள் காந்தி மைதானம் முன்பு குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது. நேற்று அதிகாலையில் அவர்களுக்கு உயரம் சரிபார்த்தல், ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. குறிப்பாக 1.6 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியாமல் திணறியதால் பெரும்பாலானோர் வெளியேற்றப்பட்டனர். நன்கு உடற்பயிற்சி செய்து வந்த இளைஞர்களால் மட்டுமே இலக்கை அடைந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறமுடிந்தது.
இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு கோவை மண்டல இயக்குனர் ஆர்.ஜே.ரானே, ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலர் பிரிக்கேடியல் வி.எஸ்.சங்கியான் ஆகியோர் மேற்பார்வையில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இனிவரும் நாட்களில் தர்மபுரி, ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் சேலம் காந்தி விளையாட்டு மைதானம் முன்பு மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.