கெலமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

கெலமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-08-23 22:30 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் கொப்பக்கரை, ரத்தினகிரி, திம்ஜேப்பள்ளி, இருதாளம், குந்துமாரனப்பள்ளி, அக்கொண்டப்பள்ளி, நாகமங்கலம், கடுர், சந்தனப்பள்ளி மற்றும் பெட்டமுகிலாளம், உல்லட்டிகவுண்டனுர் ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை சார்பாக சாலைகள் அமைக்கும் பணிகள், குடிநீர் திட்ட பணிகள், பழங்குடியினர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணிகள், துவரை சாகுபடி, கொய்மலர் சாகுபடி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதையொட்டி ஊரக வளர்ச்சித்துறை சார்பாக சூளகுண்டா, சின்னசூளகுண்டா, பட்டிப்பாறை, கும்மனூர் கொட்டாய், பூசாரிக்கொட்டாய் ஆகிய 5 கிராமங்கள் பயன் பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் ரூ.17.10 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றும் பணிகளையும், ரத்தினகிரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் தடுப்பு ஓடை குறுக்கே ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு தடுப்பு அணை கட்டப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டார்.

மேலும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பாக திம்ஜேப்பள்ளி கிராமத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் துவரை விதை சாகுபடி பணிகளையும், நாகமங்கலம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பாக சொட்டு நீர் பாசனம் அமைத்து கொய்மலர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளா ண்மை) மோகன் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர்( ஊரக வளர்ச்சி) மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவராஜ், ஜெபராஜ் சாமுவேல் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்