காஞ்சீபுரம் அருகே ஏரிக்கரையில் புதுமாப்பிள்ளை கொலை

காஞ்சீபுரம் அருகே ஏரிக்கரையில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2018-08-23 05:30 IST
செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா பில்லாதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 32). இவருடைய மனைவி புனிதா (26). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

புஷ்பராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 20-ந் தேதி வேலைக்கு சென்ற புஷ்பராஜ் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காஞ்சீபுரம் மாவட்டம் கோளிவாக்கம் ஏரிக்கரையில் புஷ்பராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு புஷ்பராஜின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென வெம்பாக்கம்-காஞ்சீபுரம் சாலையில் புஷ்பராஜின் உடலை வைத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு சரக துணை சூப்பிரண்டு குணசேகரன், செய்யாறு இன்ஸ்பெக்டர் சாரதி, காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் புஷ்பராஜை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் கூறினர்.

அதற்கு பதில் அளித்த போலீசார், கொலை சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருவதாக கூறினர். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திடீர் சாலை மறியலால் அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்