செயற்கை மணல் திட்டை மேலும் அதிகரிக்க 900 டன் எடையுள்ள ராட்சத இரும்பு மிதவை இன்று கடலில் மிதக்கவிடப்படுகிறது

புதுவை கடற்கரையில் செயற்கை மணல் திட்டை மேலும் அதிகரிக்க 900 டன் எடையுள்ள ராட்சத இரும்பு மிதவை கடலில் இறக்கி மிதக்க விடப்பட உள்ளது.

Update: 2018-08-22 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி காலை நனைக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இதனை தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து கடற்கரையில் தலைமை செயலகத்திற்கு எதிராக ரூ.25 கோடி செலவில் செயற்கை மணல் பரப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணி மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கடந்த சில மாதங்களாக இந்த பணியை செய்து வருகின்றனர்.

முதல் கட்டமாக தலைமை செயலகத்திற்கு எதிரே கற்கள் கொட்டப்பட்டது. அதன் பின்னர் துறைமுக முகத்துவாரம் பகுதியில் தூர்வாரம் மணல் தண்ணீருடன் பைப் மூலம் எடுத்து வரப்பட்டு கடற்கரையில் கொட்டப்பட்டது.

இதில் ஓரளவு செயற்கை மணல் திட்டு உருவானது. இதனை தொடர்ந்து தற்போத புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தலைமை செயலகத்திற்கு எதிரே கடலில் இறங்கி கடல் நீரில் குளித்தும், கால்களை நனைத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

தற்போது இந்த மணல் திட்டை மேலும் அதிக அளவு உருவாக்கும் விதமான கடற்கரை தலைமை செயலகம் எதிரே 50 மீட்டர் அகலமும், 60 மீட்டர் நீளமும் கொண்ட முக்கோண வடிவிலான ராட்சத செயற்கை இரும்பு மிதவையை கடலின் உள்ளே இறக்க உள்ளனர். 900 டன் எடை உள்ள இந்த இரும்பு மிதவை செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

தற்போது இந்த மிதவை அமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்து விட்டது. இந்த மிதவை கடற்கரையில் இருந்து 120 மீட்டர் தூரத்தில் கடலின் உள்ளே மிதக்க விடப்பட உள்ளது. மிதவை கடலில் அடித்து செல்லாமல் இருக்க கடலின் அடியில் பெரிய சிமெண்ட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரும்பு மிதவையின் உள்ளே தண்ணீர் மற்றும் மணல் நிரப்பப்பட உள்ளது.

இந்த மிதவை இன்று(வியாழக்கிழமை) காலை கடலின் உள்ளே இறக்கி மிதக்கவிடப்பட உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘ராட்சத மிதவையை கடலில் இறக்கி மிதக்கவிட்ட பின்னர் காந்தி சிலை முதல் வைத்திக்குப்பம் வரை செயற்கை மணல் திட்டு உருவாகும். இரும்பு மிதவை கடலில் உருவாகும் செயற்கை மணல் திட்டு அலையின் வேகத்திலும், கடல் சீற்றத்திலும் அடித்து செல்லாதபடி பாதுகாக்கும்’’ என்றார்.

மேலும் செய்திகள்