பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

Update: 2018-08-22 23:30 GMT
தர்மபுரி,

முஸ்லிம் சமுதாய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதையொட்டி மசூதிகள், பள்ளிவாசல்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று தொழுகை நடத்தினார்கள்.

தர்மபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பு சார்பில், தர்மபுரி-கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் ராமக்காள் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினார்கள். கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் குடும்பங்களுக்கு இந்த தொழுகையின் முடிவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொழுகையில் பங்கேற்ற இளைஞர்கள், சிறுவர்-சிறுமிகள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி மற்றும் பல்வேறு வகையான உதவிகளை வழங்கினார்கள். சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை தர்மபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பு தலைவர் அப்துல்காதர், செயலாளர் இக்பால், பொருளாளர் நசீர், மாவட்ட முத்தவல்லி சங்க தலைவர் ஜப்பார், கூட்டமைப்பு துணைத்தலைவர்கள் ரியாஸ், இப்ராகிம், நிர்வாகி சுபான்பாய் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

அரூரில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி முஸ்லிம்கள் மசூதியில் இருந்து ஊர்வலமாக பெரியார் நகரில் உள்ள மைதானத்திற்கு வந்தனர். அஙகு அவர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

இதேபோல் பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், மொரப்பூர், நல்லம்பள்ளி, தொப்பூர், கம்பைநல்லூர், பொம்மிடி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள மசூதிகள், பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். தொழுகை நடைபெற்ற இடங்களில் போக்குவரத்தை சீரமைக்கும் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்