வெறிநாய்கள் கடித்து குதறியதில் 14 ஆடுகள் செத்தன
காங்கேயம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 14 ஆடுகள் செத்தன.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் பெரும்பாலான விவசாயிகள் கால்நடை வளர்ப்பையே பிரதான தொழிலாளாக வைத்துள்ளனர். குறிப்பாக அவர்கள் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார்கள். பகல் முழுவதும் மேய்ச்சல் நிலங்களில் ஆடுகளை மேய்த்து விட்டு, இரவு நேரத்தில் தோட்டங்களில் உள்ள பட்டிகளில் அவற்றை அடைத்து விட்டு, மீண்டும் காலையில் மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம்.
இவ்வாறு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆடுகளை, இரவு நேரங்களில் கூட்டமாக வரும் வெறிநாய்கள் கொன்றுவிட்டு, அவற்றின் இறைச்சியை தின்று விட்டு சென்றுவிடுகின்றன. இதனால் ஆடுகளை வளர்த்து வரும் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றுள்ளன.
இந்த நிலையில் காங்கேயம் அருகே வடசின்னாரிபாளையம் ஊராட்சி அய்யாக்குட்டிவலசு கிராமத்தில் விவசாயி முத்துசாமியின் தோட்டத்தில் பட்டியில் இருந்த 4 செம்மறி ஆடுகள், 5 குட்டி ஆடுகள் என்று 9 ஆடுகளை வெறிநாய்கள் நேற்று அதிகாலை கடித்து குதறியுள்ளன. இதில் 8 ஆடுகள் செத்து விட்டன. படுகாயத்துடன் உயிர்தப்பிய ஆட்டுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் பக்கத்து தோட்டத்தில் உள்ள ஒரு ஆட்டை அந்த வெறிநாய்கள் தாக்க முற்பட்ட போது, அங்கிருந்த விவசாயிகள் சத்தம்போடவே அவை அங்கிருந்து ஓடிவிட்டன. இருப்பினும் அந்த ஆடும் படுகாயம் அடைந்தது. அதற்கும் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் காங்கேயம் அருகே உள்ள பாப்பினி ஊராட்சி உத்தமபாளையம் கிராமத்தில் விவசாயி நடராஜ் தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் நேற்று முன்தினம் இரவு 25 செம்மறி ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். நேற்று காலை சென்று பார்த்த போது அவற்றில் 6 ஆடுகள் வெறிநாய்கள் கடித்து குதறியதால் செத்துக்கிடந்தன. மேலும் அவற்றின் இறைச்சியை நாய்கள் தின்று விட்டு சென்றிருந்தன. இதை பார்த்து விவசாயி நடராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
காங்கேயம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் மொத்தம் 14 ஆடுகள் செத்த சம்பவம், ஆடுகள் வளர்க்கும் விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகளை பாதுகாக்க கிராமங்களில் குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு கும்பலாக சுற்றித்திரியும் வெறிநாய்களை கட்டுப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் மற்றும் காங்கேயம் நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.