வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட தென்னை மரங்கள்

ஈரோடு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட தென்னை மரங்கள் கரைஒதுங்கின.

Update: 2018-08-22 21:45 GMT
ஈரோடு, 


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. மேட்டூர் அணையில் இருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டதால் ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து உள்ளது. இதனால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இந்தநிலையில் காவிரி ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இருந்த பாறைகள் வெளியே தெரிய தொடங்கி உள்ளன. மேலும், வெள்ளத்தில் வேரோடு அடித்து வரப்பட்ட தென்னை மரங்கள் கரையோரமாக ஒதுங்கி கிடக்கின்றன. வெள்ளம் அதிகமாக சென்றபோது கருங்கல்பாளையம் பழைய மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் முதல் அந்த பாலத்தில் வழக்கம்போல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

காவிரிக்கரை முனியப்பன் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த வீடுகள் அனைத்தும் ஆற்றங்கரையோரத்தின் மேடான பகுதியில் உள்ளது. இதனால் வெள்ளத்தால் அங்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அங்கு வாழும் பொதுமக்கள் காவிரிக்கரை வழியாக செல்லும் மண்ரோட்டை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ரோடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்து சென்றது. இதன்காரணமாக அந்த ரோட்டில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து விட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கல் பெயர்ந்து கரடு, முரடாக மாறி உள்ளது. எனவே முனியப்பன்நகருக்கு செல்லும் ரோட்டை சீரமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்