குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-22 21:45 GMT
வேடசந்தூர், 


வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர ஊரின் அருகே உள்ள மண்டபம்புதூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைத் தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மின்மோட்டார் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் காவிரிநீர் வினியோகம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதுதவிர மண்டபம் புதூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறும் தண்ணீரின்றி வறண்டது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை பூத்தாம்பட்டியில் வேடசந்தூர்-வடமதுரை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபடக்கூடாது என்றும், இதுதொடர்பாக ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று முறையிடுமாறும் போலீஸ் துணை சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இருந்தபோதிலும் போலீசார், ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சீத்தாராமன் அந்த கிராமத்துக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். அத்துடன் வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவத்தின் ஏற்பாட்டின் பேரில் அந்த கிராமத்துக்கு தற்காலிகமாக நேற்று டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்