புள்ளி மான்களின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கும் அதிசயம்

புள்ளி மான்களின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கும் அதிசயம் நடக்கிறது.

Update: 2018-08-22 22:45 GMT

மசினகுடி,

நீலகிரி மாவட்டமானது 65 சதவீத வனப்பகுதிகளுடன் முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக விளங்குகிறது. இங்கு உள்ள வனப்பகுதிகளில் புலி, காட்டு யானை, சிறுத்தை, செந்நாய், கரடி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றை காண்பது அரிதாக உள்ளது. ஆனால் மான் இனங்களை மட்டும் அவ்வப்போது காண முடிகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் மான்களை எளிதில் பார்க்க முடியும். இதற்கு மான்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டு வருவதே காரணம் ஆகும்.

மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சீகூர், சிங்காரா, தெங்குமரஹாடா வனப்பகுதிகளில் புள்ளி மான், கடமான், சுருள் கொம்பு மான், குரைக்கும் மான் ஆகிய 4 இன மான்கள் காணப்படுகின்றன. இந்தியாவிலேயே பெரிய மான் இனமாக கடமான் கருதப்படுகிறது. மேலும் சுருள் கொம்பு மான்கள், குரைக்கும் மான்கள் பொதுமக்களை கண்டாலே கண்ணிமைக்கும் நேரத்தில் வனப்பகுதிக்குள் ஓடி மறையும்.

ஒவ்வொரு மான் இனங்களும் அவற்றின் தோற்றம், நிறம், உயரம், உடலமைப்பு போன்றவற்றில் பல்வேறு வேறுபாடுகளை கொண்டு உள்ளன. அதில் ஆண் மான்களின் தோற்றமும், செயல்பாடுகளும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்து உள்ளது. குறிப்பாக தோற்றத்துக்கு ஏற்ப தலையில் வளைந்து, நெளிந்து காணப்படும் கூர்மையான கொம்புகள் மான்களுக்கு கம்பீரத்தை சேர்க்கும் விதமாக உள்ளது. அந்த கொம்புகளை பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அதாவது இந்த 4 வகையான மான்களில் சுருள் கொம்பு மான், குரைக்கும் மான் ஆகியவற்றின் கொம்புகள் நிரந்தரமாக அதன் தலையில் இருக்கும் தன்மை கொண்டது. ஆனால் கடமான் மற்றும் புள்ளிமான்களின் கொம்புகள் ஆண்டுக்கு ஒரு முறை கீழே விழுந்து மீண்டும் புதியதாக முளைத்து வளரக்கூடிய தன்மை உடையது. ஆண் கடமான் மற்றும் புள்ளிமான்களின் கொம்புகள் இனப்பெருக்க காலத்தில் மற்றொரு ஆண் மான்களுடன் சண்டையிடும்போதோ அல்லது மரங்களில் தேய்க்கும் போதோ கொம்புகள் முறிந்து விழுந்து விடுகின்றன.

கொம்புகள் முறிந்து விழுந்த ஒரு வார காலத்திற்குள் மீண்டும் புதிய கொம்புகள் வளர தொடங்கி விடும். பின்னர் ஒரு மாதத்துக்குள் அந்த கொம்புகள் வெல்வெட் எனப்படும் பஞ்சு போன்ற கொம்புகளாக மாறும். அதனை தொடர்ந்து கடின தன்மை கொண்ட கொம்புகளாக வளரும். அப்போது அந்த மான்களின் கொம்புகள் மற்ற ஆண் மான்களுடன் சண்டையிட வலிமை கொண்ட கொம்புகளாக உருவெடுக்கும். புள்ளிமான்கள் 10 முதல் 200 வரை என்ற எண்ணிக்கையில் கூட்டமாக வாழக்கூடியவை.

இதுகுறித்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி வனஉயிரியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:–

மான்களுக்கு ஆயுட் காலம் 8 வயது முதல் 10 வயது வரை ஆகும். ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் 50 மான்கள் வரை வாழ்ந்து வருகின்றன. கொம்புகள் விழுவது என்பது இனப்பெருக்க காலத்தில் மட்டும் நடைபெறக்கூடிய ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் நிச்சயமாக கொம்புகள் விழுந்து மீண்டும் முளைக்கும். மான்கள் தனது கொம்புகளை மரங்களில் தேய்க்கும்போது தான், கொம்புகளின் உறுதி வலுப்பெறுகிறது. ஆண் மான்களின் கொம்புகள் விழுந்த உடன் அவற்றை பார்க்கும் போது கம்பீரம் குறைந்தது போலவும், கொம்புகள் மீண்டும் முளைத்து நன்றாக வளர்ந்த பிறகு அவற்றிற்கு அழகு சேர்க்கும் வகையிலும் அமைகிறது. வனப்பகுதிகளில் விழுந்து கிடக்கும் கொம்புகளை பொதுமக்கள் யாரும் எடுக்கக்கூடாது. அவ்வாறு எடுப்பது வன குற்றமாகும். தரையில் விழும் கொம்புகள் வெயில் அடிக்கும் போதும், மழை பெய்யும் போதும் உறுதி தன்மையை இழந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மண்ணோடு மண்ணாக மறைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்