பள்ளிக்கூட கோப்புகளை தாமதமாக அனுப்புவதாக கூறி கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்
பள்ளிக்கூட கோப்புகளை தாமதமாக அனுப்புவதாக கூறி கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.;
கூடலூர்,
பள்ளிக்கூட கோப்புகளை தாமதமாக அனுப்புவதாக கூறி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகத்தை நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலகத்தின் உள்புறம் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் சுனில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பத்மநாபன், சுந்தரன், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர்(பொறுப்பு) அய்யப்பன் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆசிரியர்கள் கூறியதாவது:–
பள்ளிக்கூடங்களில் இருந்து மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் கோப்புகளை சரிபார்த்து உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது இல்லை. உள்நோக்கத்துடன் பள்ளிக்கூட கோப்புகள் தாமதப்படுத்தப்படுகிறது. இது தவிர புதிய விதிகளின்படி கற்பித்த பயிற்சிக்காக செல்வதற்கான ஆணை ஜூன் மாதம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டியது. ஆனால் இதுவரை அந்த ஆணை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு கூறினார்கள்.
இதை கேட்டறிந்த மாவட்ட கல்வி அலுவலர்(பொறுப்பு) அய்யப்பன் தொலைபேசியில் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் கற்பித்தல் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஆணை வழங்கப்படும் என்றும், பள்ளிக்கூட கோப்புகளை அனுப்புவது சம்பந்தமான புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சிக்கான ஆணைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.