வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 2,169 தேர்தல் கல்வி குழுக்கள்
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 2,169 தேர்தல் கல்வி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் ராமன் கூறினார்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கல்வி குழுக்கள் அமைப்பது மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக மாவட்ட அளவில் அதிகாரிகளுக்கு பயிற்சி நடந்தது.
உதவி கலெக்டர் மேகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி வரவேற்றார்.
பயிற்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசியதாவது:-
குடவோலை முறையில் தொடங்கிய தேர்தல் பல்வேறு மாற்றங்களை பெற்று தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நடந்து வருகிறது. தேர்தல் என்றாலே தமிழகத்தில் ஒருவித பதற்றம் நிலவுகிறது. ஆனால் கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் பதற்றம் இல்லை. தற்போது நடைபெறும் தேர்தல்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் குழுக்கள் அமைக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முதலில் தேர்தல்முறை குறித்து தெளிவுபடுத்தி கொண்டு, தங்களுக்கு உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உயர்நிலை பள்ளியில் 86 குழுக்கள், மேல்நிலை பள்ளியில் 117 குழுக்கள், கல்லூரியில் 80 குழுக்கள், முறையான கல்வி திட்டத்தில் பங்குபெறாத எதிர்காலம் மற்றும் இளம்வாக்காளர்களுக்கு 1,860 குழுக்கள், அரசு அலுவலகங்களில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தில் 26 குழுக்கள் என மொத்தம் 2,169 தேர்தல் கல்வி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் புதிய, எதிர்கால மற்றும் முறையான கல்வி பயிலாத வாக்காளர் இடையே வாக்கின் மதிப்பு, ரகசியமாக வாக்கு அளிப்பதன் புனித தன்மையை உணர்த்துதல், வருகிற தேர்தலில் வாக்கு சதவீதத்தை உயர்த்துதல் உள்பட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தேர்தல் வாக்குமுறை குறித்த பரமபத விளையாட்டு அதிகாரிகளுக்கு செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. அதனை கலெக்டர் ராமன் பார்வையிட்டார். பயிற்சியில், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், மாநில அளவிலான தேர்தல் பயிற்றுனர் சந்தோஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.