உறவினர் வீட்டில் ரூ.3 கோடி திருட்டு - காங்கிரஸ் கட்சி பெண் பிரமுகருக்கு வலைவீச்சு

உறவினர் வீட்டில் ரூ.3 கோடி திருடிய காங்கிரஸ் கட்சி பெண் பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-08-22 21:30 GMT
பெங்களூரு,

பெங்களூரு ராஜாஜிநகரில் வசித்து வருபவர் சரோஜா. இவரது உறவினர் கதக் டவுன் தொகுதியில் கடந்த மே மாதம் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் தேர்தல் அதிகாரிகளுக்கு பயந்து சரோஜாவிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை சரோஜா தனது வீட்டில் வைத்திருந்தார். பின்னர் திடீரென்று ரூ.3 கோடியும் திருட்டுப்போனது. இதுபற்றி சரோஜா போலீசில் எந்த ஒரு புகாரும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது வீட்டில் வைத்திருந்த ரூ.3 கோடியை உறவினரும், காங்கிரஸ் கட்சியின் பெண் பிரமுகருமான வீணா திருடியிருந்தது சரோஜாவுக்கு தெரியவந்தது.

இதுபற்றி ராஜாஜிநகர் போலீஸ் நிலையத்தில் சரோஜா புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சரோஜா வீட்டில் இருந்த பணத்தை வீணா தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து, வீணாவையும், அவருடைய கூட்டாளிகள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்