கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மீனவர்கள் 7-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2018-08-22 23:00 GMT
கொள்ளிடம்,

தஞ்சை, நாகை மாவட்டங்கள் வழியாக பாயும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள முதலைமேடு திட்டு, சந்தப்படுகை, நாதல்படுகை, வெள்ளமணல், பாலூரான்படுகை உள்ளிட்ட கிராமங்களுக்குள் கடந்த வாரம் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் புகுந்தது.

அங்கு வசிக்கும் கிராம மக்கள் 1500-க்கும் மேற்பட்டவர்கள் படகுகள் மூலமாக வெளியேற்றப்பட்டு, பள்ளிக் கூடங்கள் மற்றும் சமுதாய கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் 7 நாட்களாகியும் வெள்ளம் வடியவில்லை. குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். நிவாரண முகாம் களில் கிராம மக்கள் தங்களுடைய கால்நடைகளையும் பராமரித்து வருகிறார்கள்.

கொள்ளிடம் ஆறு, கடலுடன் கலக்கும் முகத்துவாரம் பகுதி பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ளது. இதன் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மீனவர்கள் நேற்று 7-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்களின் படகுகள் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் புளியாந்துறை, காட்டூர், தாண்டவன்குளம், தற்காஸ் ஆகிய கிராமங்களில் உள்ள இறால் பண்ணைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களில் 100 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்டிருந்த பருத்தி, மரவல்லி கிழங்கு, மக்காசோளம், முருங்கை, முல்லை, அரும்பு, கத்திரி, மிளகாய், வெண்டைக்காய் பயிர்களும் வெள்ள பாதிப்புக்குள்ளாகின. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்