15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழியும் தேவம்பாடிவலசு குளம்: மதகுகள் பழுதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் கவலை

15 ஆண்டுகளுக்கு பிறகு தேவம்பாடிவலசு குளம் நிரம்பி வழிகிறது. அதே நேரத்தில் மதகுகள் பழுது காரணமாக தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2018-08-22 22:15 GMT

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடிவலசு குளம் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்தின் மூலம் 220 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர மறைமுகமாகவும் நூற்றுக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேலும் தேவம்பாடிவலசு குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயருகின்றன.

மழைக்காலங்களில் வீணாகும் நீரை தடுத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளம் அமைக்கப்பட்டு உள்ளது. புதர்மண்டி கிடந்த குளத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு உதவியுடன் விவசாயிகள் குளத்தை தூர்வாரி கரைகளை பலப்படுத்தினார்கள். கடந்த ஜூன் மாதம் பெய்ய தொடங்கிய பருவமழையால் ஜூலை மாதம் அணைகள் நிரம்பி விட்டன. மேலும் ஒரு சில குளங்களும் நிரம்பின. இதற்கிடையில் தேவம்பாடிவலசு குளத்திற்கு அருகில் உள்ள குளங்கள், தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் வீணாக கேரளாவுக்கு சென்றது.

ஆனால் தேவம்பாடிவலசு குளம் மட்டும் நிரம்பவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பி.ஏ.பி. அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரை குளத்திற்கு திறக்க வேண்டும் என்று சப்–கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பெய்த தொடர் மழையின் காரணமாக குளத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டது. மேலும் தோப்புகளில் மழைநீர் குளமாக தேங்கி நின்றது. இதன் காரணமாக முதலாம் மண்டல பாசனத்திற்கு பி.ஏ.பி. கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரை குளத்திற்கு திருப்பி விட்டனர். மேலும் மழைநீரும் வெள்ளமாக பெருக்கெடுத்து குளத்திற்கு வந்தது.இதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு குளம் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. குளத்தில் 6.6 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கலாம். தற்போது 6.4 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கி உள்ளது. இதற்கிடையில் குளம் நிரம்பி வழிந்து வருகிறது. குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இருப்பினும் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:–

குளத்தை தூர்வாரி வைத்ததால் தற்போது பெய்த மழை நீரை சேமித்து வைக்க முடிந்தது. மேலும் மழை பெய்யும் போது குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு விவசாயிகள் கடும் சிரமப்பட்டனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நீர்வழிப்பாதையை தூர்வாரினார்கள். இதன் காரணமாக 15 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பி உள்ளது சுற்று வட்டார பகுதி விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த குளத்தில் இருந்து தண்ணீர் திறக்க 2 மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் குளத்தை தூர்வாரும் போது, அந்த மதகுகளை சீரமைக்காமல் விட்டு விட்டனர்.

இதன் காரணமாக மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. தண்ணீர் வெளியேறுவதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தும், தண்ணீர் வெளியேறுகிறது. கடந்த 2 நாட்களாக மழை இல்லை. மதகு பழுது காரணமாக கஷ்டப்பட்டு தேக்கி வைத்த தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. குளத்தில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் மற்றும் மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீர் வீணாக ராமபட்டிணம் ஆற்றில் கலந்து வருகிறது. எனவே அதிகாரிகள் மதகுகள் வழியாக தண்ணீர் கசிந்து வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்