கடைகளின் பூட்டை உடைத்து ரூ.11 லட்சம் திருட்டு சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை

பேராவூரணியில் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.11 லட்சம் திருட்டு போனது. இது தொடர்பாக சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-08-22 23:00 GMT
பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி– பட்டுக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாக கடை நடத்தி வருபவர் முகமதுஇக்பால்(வயது55). இவர் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை முகமதுஇக்பால் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்து 75 ஆயிரம் திருட்டு போய் இருந்தது.

இதைப்போல ஆவணம் சாலையில் உள்ள 2 மளிகை கடையிலும் பூட்டை உடைத்து மொத்தம் ரூ.25 ஆயிரம் திருட்டு போய் உள்ளது.


இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர்களும் கடையில் இருந்து கைரேகைகளை பதிவு செய்தனர். திருட்டு குறித்து தகவல் அறிந்த கோவிந்தராசு எம்.எல்.ஏ., முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார் மற்றும் வர்த்தகர் சங்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பணத்தை பறிகொடுத்த கடைக்காரர்களிடம் திருட்டு குறித்து கேட்டறிந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


விசாரணையின் போது திருட்டு நடைபெற்ற ஒரு கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடையில் முகமூடி அணிந்த மர்ம நபர் கல்லாவை உடைத்து பணத்தை திருடிய காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சியை வைத்து போலீசார் பணத்தை திருடி சென்றவரை தேடி வருகிறார்கள். பேராவூரணியில், கடந்த வாரம் பள்ளிவாசல் அருகில் ஒரு மளிகைக் கடையில் திருட்டு நடந்தது. கடைவீதியில் நடந்து வரும் தொடர் திருட்டு காரணமாக வர்த்தகர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே திருட்டுகளை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என வர்த்தகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்