மேலப்பாளையத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை திரளானவர்கள் கலந்து கொண்டனர்

மேலப்பாளையத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-08-22 21:30 GMT
நெல்லை, 

மேலப்பாளையத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

பக்ரீத் தொழுகை 

பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.

மேலப்பாளையம் பஜார் திடலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. ஹமிம் பிர்தவுசி தொழுகையை நடத்தி பேசினார். இதில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், மாவட்ட செயலாளர் அலிப் பிலால் ராஜா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜமால், பொருளாளர் கம்புக்கடை சுல்தான் உள்பட ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய பிரசார பேரவை சார்பில் அலங்கார் தியேட்டர் வளாகத்தில் நடந்த தொழுகையை மாநில பொறுப்பாளர் முஸ்தபா நடத்தினார். மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலப்பாளையம் நயினார் முகமது பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தொழுகையை ஜலில் அகமது உஸ்மானி நடத்தினார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முகமது மீரான் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி 

மேலப்பாளையம் கரீம்நகரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. சாகுல்ஹமீது உஸ்மானி தலைமை தாங்கி தொழுகை நடத்தினார். மாநில தலைவர் முபாரக், மாவட்ட தலைவர் கனி மஸ்ஜித் ஹீதா, செயலாளர் ஜாபர் அலி, பொருளாளர் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குர்பானி 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகில் உள்ள ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு அமைப்புகள் சார்பிலும் தொழுகை முடிந்த பிறகு ஆடு, மாடுகள் ஏழைகளுக்கு குர்பானியாக வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை சிந்தாமதார் பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நெல்லை டவுனில் நடந்த சிறப்பு தொழுகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகமதுஅலி, பேட்டையில் நடந்த தொழுகையில் முன்னாள் எம்.எல்.ஏ. கோதர்மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர பகுதியில் நேற்று பக்ரீத் சிறப்பு தொழுகை 20 இடங்களிலும், 78–க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும் நடந்தது.

மேலும் செய்திகள்