மானூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்தது; 20–க்கும் மேற்பட்டோர் காயம்
மானூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில், 20–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மானூர்,
மானூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில், 20–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அரசு பஸ் கவிழ்ந்தது
மானூர் அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் இருந்து நேற்று மதியம் நெல்லைக்கு அரசு பஸ் புறப்பட்டு வந்தது. தாழையூத்தை சேர்ந்த காலேப் (வயது 43) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். உக்கிரன்கோட்டை பரிபேதுரு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது பஸ் திடீரென நிலை தடுமாறியது. இதில் பஸ்சின் முன்பக்க சக்கரம் இடதுபுறம் ரோட்டை விட்டு கீழே மண்ணில் இறங்கி கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த 20–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் மானூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
காயம் அடைந்தவர்களை மீட்டு ஆட்டோ, மோட்டார்சைக்கிள்களில் உக்கிரன்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயம் அடைந்த பஸ் கண்டக்டர் கயத்தாறை சேர்ந்த கனகராஜ் (42) உள்பட 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 15 பேர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இந்த விபத்து குறித்து மானூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.