இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-08-22 22:00 GMT

தூத்துக்குடி, 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மீனவர்கள் கைது

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் வினோத். இவருடைய மனைவி மரியபாக்கியம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், அதே பகுதியை சேர்ந்த அமலன் மகன் ரூபின்ஸ்டன் (வயது 38), நசரேன் மகன் வில்பிரட் (55), சார்லஸ் மகன் அந்தோணி (35), சேசு மகன் ரமேஷ் (39), இசக்கிமுத்து, முனியன், விஜய் (19), மாப்பிள்ளையூரணி சுனாமிகாலனியை சேர்ந்த ஆரோக்கியம் ஆகிய 8 பேர் கடந்த 19–ந் தேதி காலையில் திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் காலையில் தூத்துக்குடியில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி இலங்கை கடல் பகுதியில் நுழைந்து மீன்பிடித்ததாக 8 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 8 மீனவர்களும் கல்பிட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் புத்தளம் கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை செப்டம்பர் மாதம் 3–ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 8 மீனவர்களும் நீர்க்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உறவினர்கள் கோரிக்கை

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சமீபத்தில் புதிதாக வாங்கப்பட்ட படகில் 8 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்களாம். அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து மீனவர்களை கைது செய்து உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும், படகையும் மீட்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்