பஜாஜ் சேடக் ஸ்கூட்டரில் 44 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் கோவை இளைஞர் சாதனை
பஜாஜ் நிறுவனம் சேடக் ஸ்கூட்டர் உற்பத்தியை நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்றும் பஜாஜ் ஸ்கூட்டரை பயன்படுத்துவோர் உள்ளனர். அவர்களில் ஒருவர் 25 வயது இளைஞர் ரொனால்டு ஷாலோ.
ரொனால்டு ஷாலோ பஜாஜ் சேடக் ஸ்கூட்டரிலேயே ஏறக்குறைய 9 மாதங்கள் இந்தியா மட்டுமின்றி நேபாளம், மியான்மர், பூடான் ஆகிய நாடுகளுக்கும் சென்று திரும்பி சாதனை படைத்துள்ளார்.
அவர் தனது பயண அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“கோவை தான் என் பூர்வீகம். தாய்-தந்தை இருவருமே மின் வாரியத்தில் பணி புரிகின்றனர். ‘லாஜிஸ்டிக்ஸ்’ படித்ததால் இங்கேயே தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அப்பாவின் ஸ்கூட்டரில் தான் இரு சக்கர வாகனத்தை ஓட்ட கற்றுக்கொண்டேன்.
ஆரம்பத்தில் ஒரு ஐ-போன் வாங்க வேண்டும் என்பதற்காக காசு சேர்க்கத் தொடங்கினேன். காசு சேர்த்த பிறகு ஒரு ஐ-போனிலேயே என் உலகம் முடங்கி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. புதிய அனுபவங்களைப்பெற என் மனம் விரும்பியது. அப்போது நான் எடுத்த முடிவு தான் ஸ்கூட்டரில் சுற்றுலா செல்வது. இதை யடுத்து 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி அம்மா, அப்பாவின் ஆசீர்வாதத்துடன் ஸ்கூட்டரில் கிளம்பினேன்.
எனது பயணத்திற்கு ஸ்கூட்டரை தேர்வு செய்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. இது கரப்பான் பூச்சி மாதிரி. எத்தகைய சூழலையும் தாக்குப்பிடிக்கும். ஸ்கூட்டரில் பழுது ஏற்பட்டால் அதை நீக்குவது எளிது. ‘ஸ்டெப்னி’ இருப்பதால் பஞ்சரானாலும் பயணத்தைத் தொடரலாம். சில முக்கிய உதிரி பாகங்களை கையோடு எடுத்துச் சென்றதால் பெருமளவு பிரச்சினை இன்றி பயணத்தை நிறைவு செய்ய முடிந்தது.
இந்த ஸ்கூட்டர் 1991-ம் மாடல். இதை 2010-ம் ஆண்டில் 2,300 ரூபாய்க்கு வாங்கினேன். அதில் படிப்படியாக பல மாறுதல்களை செய்து நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாக மாற்றினேன். எங்கிருந்தாலும் தெரிய வேண்டும் என்பதற்காக இதற்கு சிவப்பு பெயிண்ட் அடித்தேன்.
முதலில் எங்கு போக வேண்டும் என்ற திட்டமிடல் ஏதும் கிடையாது. தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்பதால் முதலில் கர்நாடகம், கோவா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பயணம் மேற்கொண்டேன். ஓரளவு ஆங்கிலம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் வழியாக முதல் கட்ட பயணம் அமைந்தது.
பொதுவாகவே தேசிய நெடுஞ்சாலையில் செல்வதை விட ஊருக்குள் சென்று அங்கு மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். பெரும்பாலும் பகலில் பயணம் இரவில் ஓய்வு என்ற நடைமுறையை கடைப்பிடித்தேன்.
மாலையில் கூடாரம் அமைத்து அருகிலிருக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி சமைக்கத் தொடங்குவேன். 9 மாத பயணத்தில் 6 முறை மட்டுமே வெளியிடங்களில் தங்க நேர்ந்தது.
உத்தரகாண்ட் மாநிலம் மானாவில் டிசம்பர் மாதம் கூடாரம் அமைத்து தங்கியபோது ஐந்து அடுக்கு போர்வைதான் கடும் குளிரிலிருந்து என்னைக் காப்பாற்றியது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் டீ கடையில் சாப்பிட்டு திரும்பியபோது மணி பர்ஸ் திருடு போனது. பிறகு அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டு டெல்லி வந்து அங்கிருந்து நண்பர்களிடம் பணத்தை பெற்று பயணத்தைத் தொடர்ந்தேன்.
2 மாதங்களில் ஜம்மு காஷ்மீரை அடைந்ததும், அங்கிருந்து இமயமலை அடிவாரம் முழுவதும் பயணம் செய்து அருணாசலப் பிரதேசத்தை அடைந்தேன்.
நேபாளத்திற்கு சென்ற போது அங்கு உள்ளூர் கும்பல் ஒன்று தாக்கியது. அதேபோல காங்டாக்கில் சிலர் ஸ்கூட்டரை சேதப்படுத்தினர்.
பனிப்பொழிவு, பணம் திருடு போனது, உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டது, ஸ்கூட்டருக்கு சேதம் போன்ற சம்பவங்கள் எனது பயண வேகத்தை முடக்கவில்லை.
ஜோஜிலா மலைப் பகுதி செங்குத்தாக இருந்ததால், ஸ்கூட்டர் 60 கிலோ எடையுடன் மேலே ஏறவில்லை. இதனால் முதல் கியரில் முழுவதுமாக ஆக்ஸிலேட்டரை கொடுத்தப்படியே ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டே செல்ல வேண்டியிருந்தது. இந்த பகுதியில் பயணம் செய்வது சவாலானதாகவே இருந்தது.
மோசமான அனுபவங்கள் சில என்றால் நல்ல அனுபவங்கள் பல. எல்லா இடங்களிலும் மொழியைக் கடந்து உதவி செய்தவர்கள் ஏராளம். புன்னகை ஒன்றுதான் எனக்குத் தெரிந்த ஒரே மொழி. எனது தேவை அறிந்து எனது சைகை பாஷை புரிந்து உதவியவர்கள் பலர்.
ராணுவத்தினர் தங்களது முகாமில் தங்க இடமளித்து உணவளித்து வழியனுப்பினார்கள். போலீஸாரும் காவல் நிலையங்களில் தங்கிச்செல்ல அனுமதித்துள்ளனர். குருத்வாராக்களிலும் தங்க அனுமதித்தனர்.
9 மாத பயணத்தில் ஓரளவு இந்தி பேச கற்றுக்கொண்டேன். நான் பார்த்த, சந்தித்த மக்களிலேயே வட கிழக்கு பிராந்திய மக்கள்தான் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். மூங்கில் குடிசைகளில் வசிக்கின்றனர். தங்களுக்குத் தேவையானதை விளைவித்துக் கொள்கின்றனர். எந்த எதிர்பார்ப்பும் இன்றி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள்.
பணம் மட்டுமே எல்லாவற்றுக்கும் தீர்வாகிவிடாது என்பதை இந்த பயணம் எனக்கு உணர்த்தியது. பல நாட்கள் பணமே இல்லாமல் பயணத்தைத் தொடர்ந்தேன்.
இவ்வாறு கூறும் ரொனால்டு ஷாலோ, நீண்ட தூர பயணத்துக்கு ஸ்கூட்டர் ஏற்றதல்ல என்ற கருத்தை 44 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து மாற்றியுள்ளார்.