கலைஞரின் குணாதிசயம்
ஐந்து முறை முதல்- அமைச்சராக ஜொலித்தவர் கலைஞர் கருணாநிதி. மிகவும் எளிமையானவராக, சாதனையாளராக, வியக்கத்தக்க வகையில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துகாட்டியவர் அவர்.
கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. அளவிட முடியாதது. அவர் மறைவின் போது, கோடானு கோடி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது, அவர் மக்களுக்கு ஆற்றிச்சென்ற நற்தொண்டினை பறைசாற்றியது.
சிறப்பு பொருளாதாரமண்டலம் என்ற திட்டம் மருத்துவ முறையில் இதுவரை யாரும் ஆரம்பித்ததில்லை. அத்திட்டத்தை செயல்படுத்த என்னுள் ஆசை தீ பற்றியது. என்னுடைய முதல் சந்திப்பு கலைஞருடன் இது பற்றியதாக இருந்தது.
நான் ரெயில்வே மருத்துவமனையில் இருந்து விலகியதும், புதிய மருத்துவ முறைகளை முதன்முறையாக கையாண்டது விஜயா மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைகளில் தான் (எடுத்துக்காட்டாக முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை).
முதல்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது விஜயா மருத்துவமனையில் தான்.
எஸ்கார்ட் போன்ற மருத்துவமனை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மட்டுமே அதிநவீன தொழில் நுட்பங்கள் கொண்ட பல்வேறு மருத்துவ துறைகளும் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது.
முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் மருத்துவ அறிவியல் பூங்கா ஆரம்பிப்பதற்கான திட்டம் என் மனதில் எழுந்தது. குறைந்த விலையில் தரமான மருந்துகளும், மருத்துவ கருவிகளும், உள்நாட்டு ஆராய்ச்சியில் செய்ய இயலும் என நன்றாக எனக்கு தெரிந்ததால் இத்திட்டத்தை முதல்முறையாக செயல்படுத்த எண்ணினேன். இருபது வருடத்துக்கு பிறகு, அதே சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தினை இன்று அரசும் மேற்கொள்ள விழைகிறது.
இதை ஆரம்பிப்பதற்காக, எனக்கு தெரிந்த அடிப்படை கொள்கைகளை கட்டமைத்து விண்ணப்ப படிவத்தினை கலைஞரிடம் சமர்ப்பித்தேன். அதனை படித்த கலைஞர், அதிலுள்ள குறைகளை சுட்டிக் காட்டி, அப்போதைய இந்திய ஆட்சி பணி அதிகாரி பரூக்கிடம் கொடுத்து அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய பணித்தார்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் முதல்முறையாக மருத்துவ துறைக்கு தேவையான தரமான மலிவான மருந்து மற்றும் மருத்துவ கருவிகளை உள்நாட்டிலே உருவாக்க போவதை எண்ணி கலைஞர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
எனது மகன் திருமண நிகழ்வுக்காக அவருக்கு அழைப்பிதழ் கொடுக்க, அவருடைய கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றேன். உடல்நலக்குறைவால் தளர்ந்து இருந்தபோதும், மிக ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் எழுந்து நின்று என்னை வரவேற்றார். தனது உடல்நிலை பற்றி குறிப்பிடும்போது நகைச்சுவையாக, ‘உங்கள் மருந்தால் என்னை நடக்க வைத்தால், நான் உங்களின் மகன் திருமணத்துக்கு கட்டாயம் வருவேன்’ என்றார்.
அதே அறையில் அப்போதைய மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இருந்தார். அவரை அழைத்து, தன் சார்பாக என் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என கலைஞர் அறிவுறுத்தினார். இது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
நான் விடைபெறுவதற்கு முன் கலைஞர் என் தோளை தட்டி கொடுத்து, ஆற்காடு வீராசாமியிடம் இவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னார். ஸ்டாலினையும் என் திருமணத்துக்கு வரச் சொல்வதாக கூறினார். அவர் கூறியது போல, திருமண நாள் அன்று மணமகன், மணமகள் வருவதற்கு முன்பாகவே ஸ்டாலின் மற்றும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் வந்திருந்தனர்.
புதுச்சேரியில் முதன்முறையாக சிறுபான்மை ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் மருத்துவமனை ஆரம்பிக்க நினைத்தேன். அதற்காக, கலைஞரை சந்திக்க முயன்றும் முடியவில்லை. இதனால், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரை சந்தித்து எனது விருப்பத்தை தெரிவித்தேன். அதை கேட்ட அவர், எவ்வித மறுப்புமின்றி அடுத்த நொடியில் கலைஞரை தொடர்பு கொண்டார்.
பிறகு சண்முகநாதன் வாயிலாக அப்போதைய புதுவை முதல்-மந்திரி ஜானகிராமனுக்கு என்னுடைய விருப்பத்தினை கலைஞர் கொண்டு சேர்த்தார். இப்படியாக புதுவை மருத்துவமனை அமைய கலைஞர் ஒரு கருவியாக செயல்பட்டார்.
கலைஞரை சந்திக்க எனக்கு இரண்டு வாய்ப்புகள் கிட்டியபோது, அவர் எனக்கு அளித்த ஆசிகளும், ஆதரவும், அரவணைப்பும் என் வாழ்வில் மிக முக்கியமான பொன்னான தருணங்கள். என் நினைவில் என்றும் நிலைத்தவை கலைஞரின் எளிமையும், பாரபட்சமின்றி எல்லோருக்கும் உதவும் எண்ணமும், தமிழ்த் தாய்க்கு செய்த தொண்டும், ராஜ தந்திரமும்தான்.
தமிழ் வாழும் வரை கலைஞர் வாழ்வார். அவருடைய புகழ் வாழும்.
-டாக்டர் கே.எம்.செரியன்