மும்பை புனே எக்ஸ்பிரஸ் சாலையில் முதலாவது பேட்டரி சார்ஜிங் மையம்
நாட்டின் முதலாவது பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்யும் மையம் மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை உருவாக்கும் மெகாந்தா பவர் நிறுவனம் இந்த சார்ஜிங் மையத்தை ஏற்படுத்தியுள்ளது. லோனாவாலா பகுதியில் உள்ள ஓட்டல் சென்டர் பாயின்ட்டில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சமீபகாலமாகவே பேட்டரி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பேட்டரி ஸ்கூட்டர்களையும், பேட்டரி கார்களையும் சாலைகளில்அதிகமாக பார்க்கமுடிகிறது. மக்களிடையே பேட்டரி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், அதுசம்பந்தமான மற்ற தேவைகளும் அதிகரித்திருக்கின்றன. இதை புரிந்துகொண்ட மெகாந்தா பவர் நிறுவனம், மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் இந்தியாவின் முதல் பேட்டரி சார்ஜிங் மையத்தை ஆரம்பித்திருக்கிறது. இந்த மையத்தில் ஏசி மற்றும் டிசி முறைகளில் சார்ஜிங் செய்யமுடியும் என்பதால் அனைத்து வகையான பேட்டரி வாகனங்களையும் இதில் சார்ஜ் செய்யலாம். இதன் அடுத்தகட்டமாக பெங்களூரு மைசூரு தேசிய நெடுஞ்சாலையிலும் இதுபோன்ற பேட்டரி சார்ஜிங் மையங்களை அமைக்க உள்ளனர்.
பேட்டரி வாகனங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் இந்த சார்ஜிங் மையங்களை தானியங்கி முறையில் இயக்க முடிவு செய்துள்ளனர். இதன்படி சார்ஜிங் செய்வதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். இதற்கென பிரத்யேக செயலியை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. ‘சார்ஜ்-இன்’ ( ChargeIn ) என்ற பெயரிலான இந்த செயலியின் மூலம், சார்ஜிங் செய்வதற்கான கட்டணங்களை செலுத்துவதோடு, அருகில் இருக்கும் பேட்டரி சார்ஜிங் மையங்கள் குறித்த தகவல்களையும் பெறமுடியும். மத்திய கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த சார்ஜிங் மையங்கள், பேட்டரி வாகனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் இடமாகவும் அமைய இருக்கிறது.