மணம் வீசி எழுப்பும் அலாரம்

அலாரம் வைத்து எழுந்திருப்பது என்பது இப்போது அவசியமான ஒன்றாகிவிட்டது.;

Update: 2018-08-22 05:14 GMT
முன்பெல்லாம் காலையில் எழுந்திருக்க டைம்பீஸ் கடிகாரத்தில் நேரத்தை செட் செய்து, அது மணியடிக்கத் தொடங்கியவுடன் அதை அணைத்துவிட்டு தொடர்ந்து தூங்குவோரே அதிகம். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்வோருக்கு பிடிக்காத ஒன்று அலாரம் கடிகாரம்தான். ஆனால் இப்போது செல்போனிலேயே இனிமையான இசையை எழுப்பி உங்களை விழிக்கச் செய்யும் வசதியும் வந்துவிட்டது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், மணம் வீசி எழுப்பும் அலாரத்தை உருவாக்கியுள்ளது. இந்த கடிகாரத்தின் சிறப்பம்சமே உங்களை எழுப்ப வேண்டிய நேரத்தில், உங்களுக்குப் பிடித்தமான நறுமணத்தை இது பரப்புமாம்.

தூக்கத்திலிருக்கும் போது, திடீரென காபி நறுமணம் வீசினால் நீங்கள் புத்துணர்வு கொண்டு எழுந்திருக்க மாட்டீர்களா? அந்த வேலையைதான் செய்கிறது, இந்த நவீன அலாரம்.

‘சென்சார்வேக் டிரையோ’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த அலாரத்தில் காபி, ஆரஞ்சு, புல்வெளி, பழங்கள், சாக்லேட், மின்ட் இப்படி உங்களுக்குப் பிடித்த நறுமண பாக்கெட்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு பாக்கெட் ஏறக்குறைய 30 நாட்கள் வரை நறுமணம் வீசுமாம். நாம் எழுந்தவுடன், கண்ணைக் கூச வைக்காத ஒளி வெளிச்சத்தில் நேரத்தைக் காட்டுகிறது. பிறகு காதுக்கு இனிமையான ஒலியை எழுப்பி, தூக்கத்தை விரட்டுகிறது. இதன் மூலம் நாள் முழுவதும் புத்துணர்வோடு நீங்கள் செயல்பட முடியுமாம். மூன்று செயல்களைப் புரியும் இந்த கடிகாரம் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஆனால் இப்போதிலிருந்தே ஆர்டர்கள் குவிய ஆரம்பித்துவிட்டதாம்.

மேலும் செய்திகள்