4 ஏரிகளை தொடர்ந்து மும்பைக்கு குடிநீர் வழங்கும் பட்சா ஏரி நிரம்பியது

4 ஏரிகளை தொடர்ந்து மும்பைக்கு குடிநீர் வழங்கும் பட்சா ஏரி நேற்று நிரம்பியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2018-08-22 00:20 GMT
தானே,

மும்பை பெருநகரம் தனது குடிநீர் தேவைக்காக பருவமழையை நம்பிதான் உள்ளது. மோடக் சாகர், துல்சி, விகார், தான்சா, மேல் வைத்தர்ணா, கீழ் வைத்தர்ணா மற்றும் பட்சா ஆகிய 7 ஏரிகளில் இருந்து மும்பை நகருக்கு குடிநீர் கிடைக்கிறது.

இந்த ஆண்டு மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக துல்சி, மோடக் சாகர், விகார், தான்சா ஆகிய 4 ஏரிகள் அடுத்தடுத்து நிரம்பி நிரம்பின.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மும்பையின் குடிநீர் தேவையில் 50 சதவீத தண்ணீரை வழங்கும் பிரதான ஏரியான பட்சா ஏரியின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில், நேற்று மாலை பட்சா ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து அந்த ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி கொண்டிருக்கிறது. மும்பைக்கு குடிநீர் வினியோகிக்கும் பெரிய ஏரியான பட்சா ஏரி நிரம்பி உள்ளது மும்பைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பட்சா உள்ளிட்ட 5 ஏரிகள் நிரம்பியுள்ளதன் மூலம் அடுத்த ஆண்டு பருவமழை வரையிலும் மும்பைக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதில் எந்த சிக்கலும் ஏற்படாது என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். 

மேலும் செய்திகள்