முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: 25-ந்தேதி கோடை குறிஞ்சி விழா

கோடை குறிஞ்சி விழா வருகிற 25-ந்தேதி நடத்தப்படும் என்றும், முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

Update: 2018-08-21 23:33 GMT
திண்டுக்கல், 


கொடைக்கானலில் குறிஞ்சி பூக்கள் அதிக அளவு பூத்துக்குலுங்குகிறது. குறிஞ்சி பூக்கள் குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில், இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை குறிஞ்சி விழா நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால், அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில், கோடை குறிஞ்சி விழா முன்னேற்பாடு பணிகளை கொடைக்கானலில் கலெக்டர் டி.ஜி.வினய் பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 25-ந்தேதி கோடை குறிஞ்சி விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் அதிக அளவில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழும் வகையில் குறிஞ்சி பூங்காவில் நடைபாதைகளை சீரமைத்தல், தாழ்வான பகுதிகளில் படிக்கட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிஞ்சி பூக்கள் குறித்த விளம்பர பலகைகளை நிறுவுதல், அவற்றின் வரலாறு குறித்த கையேடு வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலைத்துறையின் மூலமாக பல்வேறு பூஞ்செடிகளை நடவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, ஆர்.டி.ஓ. மோகன், நகராட்சி ஆணையர் முருகேசன், தாசில்தார் ரமேஷ், சுற்றுலா அலுவலர் உமாதேவி மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்