காளத்திநாதர் கோவிலில் கோபுர கலசங்கள் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பனப்பாக்கத்தில் உள்ள காளத்திநாதர் கோவிலில் 2 கோபுர கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-08-21 22:45 GMT
பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் பழமை வாய்ந்த ஞானாம்பிகை உடனுறை காளத்திநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். மேலும் இங்கு அய்யப்பனுக்கு தனி சன்னதி உள்ளதால் கார்த்திகை மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவில் குருக்கள் பாஸ்கர் நடையை சாத்திவிட்டு, கோவில் வெளிப்புறம் பூட்டிவிட்டு சென்றார்.

மீண்டும் நேற்று காலை பாஸ்கர் கோவிலை திறந்து பூஜை செய்ய வந்தார். அப்போது கோவிலில் உள்ள ஞானாம்பிகை அம்மன் சன்னதியின் கோபுரத்தில் இருந்த 3 கலசங்களில் 2 கலசங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் கோவில் அறங்காவலர் சிவராஜிடம் தெரிவித்தார். அவர் நெமிலி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், பழமையான இந்த கோவிலில் கோபுர கலசங்கள் திருட்டு போய் உள்ளது. மர்ம நபர்கள் கோவில் மதில் சுவர் வழியாக ஏறிகுதித்து வந்து திருடி சென்றுள்ளனர். இது கோபுர கலசங்களை திருடும் கும்பலின் கைவரிசையாக இருக்கும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்றார்.

இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கோவிலில் கோபுர கலசம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்