பட்டப்பகலில் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தொழிலாளி ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே உள்ள ராமர்பிள்ளைதோப்பு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவருடைய மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதியின் மகன் அர்ஜூனன் (19). இவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். முருகன் என்பவர் நாகல்நகர் ரவுண்டானா அருகே பூக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு அர்ஜூனன் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவருடன் சேர்ந்து மேலும் 3 பேர் வேலை செய்கின்றனர்.
நேற்று மாலை 4.45 மணியளவில் வழக்கம்போல அர்ஜூனன் பூக்கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். இந்தநிலையில் 3 பேர் கொண்ட கும்பல் திடீரென கடைக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டியது. இதில் வெட்டுக்காயம் அடைந்த அவர் சுதாரித்துக்கொண்டு, அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து பாரதிபுரம் சாலையில் ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி சென்றது. சிறிது தூரம் ஓடிய நிலையில், அந்த கும்பல் அர்ஜூனனின் காலில் வெட்டியது. இதனால் அவர் கீழே விழுந்தார்.
இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சுற்றி நின்றுகொண்டு, அர்ஜூனனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில், அவருக்கு தலை முதல் கால் வரை பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. குறிப்பாக முகத்தை குறிவைத்தே அந்த கும்பல் வெட்டியுள்ளனர். இதையடுத்து அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் விரட்டுவதை பார்த்ததும், அந்த வழியாக சென்றவர்கள் அய்யோ... அம்மா... என்றபடி அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் விரைந்து சென்று, அர்ஜூனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து அங்கு வந்த அர்ஜூனனின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அர்ஜூனனை கொலை செய்த கும்பல் யார்? அவரை எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் தொழிலாளியை ஓட, ஓட விரட்டி ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக 3 பேர் நேற்று இரவு போலீ சாரிடம் சிக்கினர். அவர் களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.