சோதனை சாவடியில் கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பெட்டவாய்த்தலை அருகே உள்ள சோதனை சாவடியில் கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, காரில் இருந்த 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2018-08-21 23:00 GMT

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்ப நாயக்கர். இவருடைய மகன் தேவராஜ்(வயது 26). இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு காரில் திருச்சியிலிருந்து ஜீயபுரம் வழியாக தொட்டியம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை தேவராஜ் ஓட்டினார். அந்த காரில் 3 பெண்கள், 3 ஆண்கள் இருந்தனர்.

பெட்டவாய்த்தலை அருகே உள்ள சோதனை சாவடியில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. கடைசியாக தேவராஜ் ஓட்டி சென்ற கார் நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சி இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்த கார், சோதனை சாவடியில் முன்னால் நின்று கொண்டிருந்த தேவராஜ் கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் தேவராஜ் காரின் டீசல் டேங்கில் தீ பிடித்தது. பின்னர் கார் முழுவதும் தீ பரவி எரிய தொடங்கியது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது சோதனை சாவடியில் இருந்த ஊழியர்கள் காரில் தவித்த 7 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால், அதிர்ஷ்டவசமாக 7 பேரும் உயிர் தப்பினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து பெட்டவாய்த்தலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் யுவராணி, ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்