பெரியாறு கால்வாய் தண்ணீர் மூலம் சிவகங்கை தெப்பக்குளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

பெரியாறு கால்வாய் தண்ணீர் மூலம் சிவகங்கை பழமையான தெப்பக்குளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-21 22:00 GMT

சிவகங்கை,

மாவட்ட தலைநகரமான சிவகங்கை நகரின் மையத்தில் அமைந்துள்ள தெப்பக்குளம் வரலாற்று சிறப்புமிக்கது. நகரின் முக்கிய நீராதாரமாக உள்ள இந்த தெப்பக்குளம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் காணப்பட்டது. இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முயற்சியால் தெப்பக்குளம் தற்போது சீரமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசும் தெப்பக்குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்ததால், தற்போது தெப்பக்குளம் சுத்தம் செய்யப்பட்டு விளையாட்டு மைதானம் போன்று இருக்கிறது. இதேபோன்று மற்றொரு குடிநீர் ஆதாரமாக திகழும் செட்டி ஊருணியும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த மழைநீர் எதுவும் உரிய வரத்துக்கால்வாய்கள் இல்லாததால் தெப்பக்குளத்திற்கும், செட்டி ஊருணிக்கும் வந்து சேரவில்லை. தற்போது தென்மேற்கு பருவமழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனையடுத்து பெரியாறு அணையில் இருந்து பிரதான பாசன கால்வாய் வழியாக தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த விஸ்தரிப்பு கால்வாய்கள் மதுரை, சிவகங்கை மாவட்ட எல்லையான குறிச்சிபட்டி வரை உள்ளன. அங்கிருந்து இடையமேலூர் வழியாக கால்வாய் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள செட்டி ஊருணியை நிரப்பி, பின்பு அங்கிருந்து நகரின் மைய தெப்பக்குளத்தை நிரப்ப முடியும். இதற்கு முன்பு கடந்த 1996–ம் ஆண்டு பெரியாறு கால்வாய் தண்ணீரை கொண்டு தெப்பக்குளம் நிரப்பப்பட்டது.

எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு நகர் பொதுமக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் தெப்பக்குளம் மற்றும் செட்டிஊருணியை பெரியாறு கால்வாய் தண்ணீரை கொண்டு நிரப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று சிவகங்கை நகராட்சி முன்னாள் தலைவர் அர்ச்சுனன் கலெக்டர் லதாவிடம் மனு கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்