மானாமதுரை அருகே பாசன கால்வாயை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்
மானாமதுரை அருகே கீழப்பசலை வைகை பாசன கால்வாயை விவசாயிகள் தங்களது சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.
மானாமதுரை,
மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் இருந்து கீழப்பசலை, மேலப்பசலை, ஆதனூர், சங்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வலது பிரதான கால்வாய் பிரிகிறது. சுமார் 7 கி.மீ. தூரமுள்ள இந்த பாசன கால்வாயில் கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாததால், தற்போது அதில் சீமைக்கருவேல மரங்கள், நாணல் புற்கள் உள்ளிட்டவை அடர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழை பெய்யும் காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்ல வழியின்றி சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் மானாமதுரை நகரின் ஒரு பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் அனைத்தும் கீழப்பசலை கால்வாயில் திறந்துவிடப்படுவதால் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்தனர். கால்வாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையில் தற்போது வைகை அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நீரை கால்வாய் மூலம் கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் வகையில் கீழப்பசலை, மேலப்பசலை, ஆதனூர் உள்ளிட்ட கிராம விவசாயிகள் கால்வாயை சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர். வைகை ஆற்றின் முகப்பில் இருந்து கால்வாயை தூர்வாரும் பணியை விவசாயிகள் நேற்று தொடங்கியுள்ளனர். இதுகுறித்து விவசாயி மணி என்பவர் கூறியதாவது:–
450 ஏக்கர் பரப்பளவு உள்ள கீழப்பசலை கண்மாயை நம்பி 800 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. கால்வாய் முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனை அகற்ற அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களது சொந்த செலவில் கால்வாயை தூர்வார முடிவு செய்தோம். தற்போது தூர்வாரும் பணிகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் பொதுப்பணித்துறை நிதிஉதவி செய்தால் கால்வாயை முழுமையாக தூர்வார முடியும். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் இன்றி இப்பகுதியில் விவசாயம் நடைபெறவில்லை. கண்மாயில் தண்ணீர் தேங்காததால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே வைகை அணையில் தற்போது திறக்கப்பட்ட தண்ணீரை, தொடர்ந்து 20 நாட்களுக்கு வந்தால் மட்டுமே கண்மாயில் ஓரளவிற்கு தண்ணீர் நிரம்ப வாய்ப்புள்ளது. எனவே பொதுப்பணித்துறை தொடர்ந்து வைகையில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.