திருப்பூரில் அரசு ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்

திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடந்தது.;

Update: 2018-08-21 22:15 GMT

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பல்லடம் ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ஞானசேகரன், ரோஸ்மேரி, அன்வருல்ஹக், இளங்கோவன், மாவட்ட இணை செயலாளர்கள் ராமன், ராணி, பி.தங்கவேல், எம்.தங்கவேல் ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாவட்ட செயலாளர் அம்சராஜ், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் குமரேசன், டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட தலைவர் நந்தகோபால், எஸ்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ரோட்டில் ஒருவரையொருவர் தங்கள் கைகளை பிடித்தபடி வரிசையாக நின்று கொண்டு, அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்களை ஒழிக்க அமைக்கப்பட்டுள்ள கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். அரசுப்பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அரசுத்துறைகளின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்