மேலூர் ஒரு போக பாசனத்திற்காக 4 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் தண்ணீர் வந்தது, விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்
மேலூரில் ஒரு போக பாசனத்துக்காக 4 ஆண்டுகளுக்கு பின்னர் கால்வாயில் வந்த தண்ணீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
மேலூர்,
பெரியாறு–வைகை பாசனத்தின் ஒரு போக பகுதி மேலூர் தாலுகா ஆகும். இங்கு சுமார் 18 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக ஏற்பட்ட கடும் வறட்சியினால் இப்பகுதியில் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். மழை பெய்யாமல் கண்மாய்களும். விவசாய நிலங்களும் வறண்டு போய் முட்புதர்களாக மாறிவிட்டன. நிலத்தடி நீரும் வற்றி பொதுமக்கள் குடி தண்ணீரை விலைக்கு வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் பெரியாறு அணை நிரம்பியதால்மேலூர் பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். எப்படியும் இந்த ஆண்டில் விவசாயம் செய்து முழுமையாக மகசூல் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே ஏற்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்த விவசாயிகள் முட்புதர்களாக கிடந்த கால்வாய்களை அதிகாரிகள் தூர்வாராததால் விவசாயிகளே கால்வாய்களை தூர்வாரி விவசாயப் பணிகளுக்கு தயார்ஆனார்கள்.
இதனிடையே மேலூரில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கால்வாயில் நேற்று வைகை தண்ணீர் வந்தது. எட்டிமங்கலம் அக்ரகாரம் எனும் இடத்தில் பெரியாறு–வைகை ஒரு போக பாசன விவசாய சங்கத் தலைவர் முருகன் தலைமையில் விவசாயிகள் ஒன்று கூடினர். அங்கு கால்வாயில் வந்த தண்ணீரை அள்ளி தலை மீது தெளித்து வணங்கினர். தேங்காய்கள் உடைத்தும், மலர்கள் தூவியும் தண்ணீரை வரவேற்றனர்.