பொட்டு சுரேஷ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் அட்டாக் பாண்டி மனு தாக்கல்

பொட்டு சுரேஷ் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அட்டாக் பாண்டி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2018-08-22 00:15 GMT

மதுரை,

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும், மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பராகவும் பொட்டு சுரேஷ் இருந்தார். கடந்த 2013–ம் ஆண்டு மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு அவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டியை சேர்த்தனர். இதில் தொடர்புடைய பலரை கைது செய்தனர்.

ஆனால் அட்டாக்பாண்டி தொடர்ந்து 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். பின்னர் 2015–ம் ஆண்டு மும்பையில் அவரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர் ஜாமீன் வழங்குமாறு தாக்கல் செய்த மனுக்களை 5–க்கும் மேற்பட்ட முறை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் அவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:–

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக என்னை போலீசார் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதன்பின் விசாரணையை சுப்பிரமணியபுரம் போலீசார் கண்காணிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கில் முறையாக விசாரணை நடக்க வாய்ப்பு இல்லை. இந்த வழக்கில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்து வரும் பொட்டு சுரேஷ் கொலை வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி., சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. மற்றும் சி.பி.ஐ. இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை அடுத்த மாதம் 6–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்